தினமும் 4 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர்- அஜித்பவார் குற்றச்சாட்டு
ஏக்நாத் ஷிண்டே ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினமும் 3 முதல் 4 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்று அஜித்பவார் குற்றம் சாட்டியுள்ளார்.;
புனே,
ஏக்நாத் ஷிண்டே ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினமும் 3 முதல் 4 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்று அஜித்பவார் குற்றம் சாட்டியுள்ளார்.
கடன் தள்ளுபடி
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் நேற்று பாராமதியில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாங்கள் மராட்டியத்தில் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய முடிவு செய்தோம். மேலும் சரியான நேரத்தில் கடனை திருப்பி செலுத்துபவர்களின் கணக்கில் ரூ.50 ஆயிரம் கொடுக்க முடிவு செய்தோம்.
நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். ஆனால் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினமும் 3 முதல் 4 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். மழையால் ஏற்பட்ட கடும் இழப்பு காரணமாக விவசாயிகள் இந்த விபரீத முடிவை எடுக்கின்றனர்.
பயிர் இழப்பீடு
இதற்கு முக்கியமான காரணம் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய பயிர் இழப்பீடு முறையாக கிடைக்காமல் போனதே ஆகும். விவசாயிகள் பயிர்சேதம் குறித்து இன்னும் ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் இழப்பீடு கிடைக்கவில்லை.
சிலருக்கு இழப்பீடு கிடைத்தபோதிலும் அந்த தொகை மிக குறைவாக இருந்தது. இது போதுமானதாக இல்லை. விவசாயிகள் இதை ஏற்க தயாராக இல்லை. மாநிலத்தில் ஆட்சியில் உள்ளவர்களுக்கோ விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க நேரமில்லை.
அனைத்திற்கும் மாநில அரசு மத்திய அரசை எதிர்பார்க்கின்றனர். கனமழையால் விளைபயிர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை வெள்ள சேத பகுதியாக அறிவிக்குபடி நான் அரசிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால் அவர்கள் எனது கோரிக்கைக்கு செவிசாய்க்க மறுத்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.