பராமரிப்பு பணியில் ஈடுபட்ட ரெயில்வே ஊழியர்களை தாக்கிய 5 பேர் கைது
பராமரிப்பு பணியில் ஈடுபட்ட ரெயில்வே ஊழியர்களை தாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;
தானே,
டோம்பிவிலி அருகே சந்திராபாடா பகுதியில் ஜூசந்திரா செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் பராமரிப்பு பணி நேற்று அதிகாலை 1 மணி அளவில் நடந்தது. இந்த பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதன் காரணமாக ரெயில்வே கிராசிங் கேட் அடைக்கப்பட்டு இருந்தது. அப்போது கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் பெண் உள்பட 7 பேர் அங்கு வந்தனர். கேட் மூடப்பட்டு இருந்ததை கண்ட அவர்கள் அங்கிருந்த ரெயில்வே ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் 7 பேரும் சேர்ந்து ரெயில்வே ஊழியர்கள் உள்பட வீரர்களை தாக்கினர். அப்போது சரக்கு ரெயில் அந்த வழித்தடத்தில் வந்ததை கண்ட கும்பல் வழிமறித்தனர். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக ரெயிலை நிறுத்தியதால் தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் அங்கு சென்றனர். அங்கு ரெயிலை மறித்த 5 பேரை மடக்கி பிடித்தனர். இதில் பெண் உள்பட 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் குறித்து போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி சென்ற 2 பேரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.