சிறுவனை கடத்தி ரூ.1.50 கோடி பறிக்க முயன்ற 5 பேர் கைது
தானேயை சேர்ந்த சிறுவனை கடத்தி ரூ.1.50 கோடி பறிக்க முயன்ற 5 பேரை குஜராத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.;
தானே,
தானேயை சேர்ந்த சிறுவனை கடத்தி ரூ.1.50 கோடி பறிக்க முயன்ற 5 பேரை குஜராத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
சிறுவன் கடத்தல்
தானேயை சேர்ந்த வியாபாரியின் 14 வயது மகன், கடந்த 7-ந்தேதி மான்பாடாவில் இருந்து மர்மநபர்களால் கடத்தப்பட்டான். மேலும் வியாபாரியை தொடர்பு கொண்டு பேசிய ஆசாமிகள் தங்களுக்கு ரூ.1 கோடிேய 50 லட்சம் தர வேண்டும் இல்லையெனில் உங்களது மகனை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.
இந்த மிரட்டல் குறித்து வியாபாரி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
5 பேர் கைது
இதில் கடத்தப்பட்ட சிறுவன் குஜராத் மாநிலம் சூரத்தில் இருப்பதாக செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்தது. இதன்பேரில் தனிப்படை போலீசார் சூரத் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு கடத்தல்காரர்களான 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும் கடத்தப்பட்ட சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.