மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் இருவேறு விபத்துகளில் 5 பேர் பலி- 3 பேர் படுகாயம்
மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் நடந்த இருவேறு விபத்துகளில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.;
மும்பை,
மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் நடந்த இருவேறு விபத்துகளில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
3 பேர் பலி
சூரத்தை சேர்ந்த தொழில் அதிபர்களான பூபேந்திர மோரியா, விரேன் மிஸ்ரா, அஜய் மற்றும் ராஜேஷ் தேசாய் ஆகியோர் மும்பை நோக்கி காரில் புறப்பட்டு சென்றனர். மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் தலசேரியில் உள்ள வளைவில் திரும்பிய போது கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையின் நடுவே தடுப்பு சுவரில் மோதி கார் எதிர்சாலையில் போய் நின்றது. அப்போது அந்த வழியாக வந்த டெம்போ ஒன்று காரின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பூபேந்திர மோரியா, விரேன் மிஸ்ரா மற்றும் டெம்போ டிரைவர் ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காரில் இருந்த அஜய், ராஜேஷ் தேசாய் ஆகிய 2 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மற்றொரு விபத்தில் 2 பேர் பலி
இதேபோல மற்றொரு சம்பவத்தில் பால்கர் மாவட்டம் மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலை ஆம்காவ் பகுதியில் குஜராத்தில் இருந்து மும்பை நோக்கி டெம்போ ஒன்று சென்றது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் மற்றொரு காரின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் டெம்போ டிரைவர் புவனேஷ்வர் ஜாதவ் பலத்த காயமடைந்தார். மேலும் காரில் இருந்த டிரைவர் தவானித் பட்டேல் மற்றும் ராத்தோட் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இருவேறு சம்பவத்தில் நடந்த விபத்தில் மொத்தம் 5 பேர் பலியாகி இருப்பதாகவும், 3 பேர் படுகாயமடைந்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ஏற்கனவே மும்பை -ஆமதாபாத் நெடுஞ்சாலையில் ஆண்டுக்கு 62 பேர் பலியாகி வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. டாடா குழும தலைவர் சைரஸ் மிஸ்திரியும் இதே சாலையில் தான் கார் விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.