பஞ்சாப் பாடகர் கொலை வழக்கை 5 மாநில போலீசார் விசாரிக்கின்றனர்- திலீப் வால்சே பாட்டீல் தகவல்

பஞ்சாப் பாடகர் கொலை வழக்கை 5 மாநில போலீசார் விசாரித்து வருவதாக உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல் கூறினார்.;

Update:2022-06-12 22:32 IST

மும்பை, 

பஞ்சாப் பாடகர் கொலை வழக்கை 5 மாநில போலீசார் விசாரித்து வருவதாக உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல் கூறினார்.

பஞ்சாப் பாடகர் கொலை

பஞ்சாப்பை சேர்ந்த பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மாதம் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு பின்னணியில் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் இருப்பதாக டெல்லி போலீசார் சமீபத்தில் கூறினர்.

மேலும் சித்து மூஸ்வாலா கொலை குறித்து புனே போலீசாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட மகாகல் என்ற சித்தேஷ் காம்ளேவுக்கு முன்கூட்டியே தொியும் எனவும், அவர் விக்ரம் பிரார் என்ற தாதாவுடன் தொடர்பில் இருந்ததாகவும் டெல்லி போலீசார் கூறியுள்ளனர். விக்ரம் பிரார், லாரன்ஸ் பிஷ்னோயின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.

5 மாநில போலீசார்

இந்தநிலையில் சித்து மூஸ்வாலா கொலை வழக்கு விசாரணை குறித்து மாநில உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல் கூறியதாவது:-

சித்து மூஸ்வாலா கொலை குறித்து 4 முதல் 5 மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பரபரப்பான வழக்கு என்பதால் நடந்து வரும் விசாரணை குறித்து நான் பொதுவெளியில் கருத்து கூற முடியாது. பாடகர் வழக்கு விசாரணையை மராட்டிய போலீசார், பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

நுபுர் சர்மாவுக்கு எதிரான இஸ்லாமியர்களின் போராட்டம் மராட்டியத்தில் அமைதியான முறையில் நடந்தது. மாநிலத்தின் எந்த பகுதியிலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. விதிமீறல்கள் நடந்த இடங்களில் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்