புனே-நாசிக் நெடுஞ்சாலையில் கார் பல்டி அடித்து 5 மாணவர்கள் பலி

புனே- நாசிக் நெடுஞ்சாலையில் டயர் வெடித்ததால் கார் பல்டி அடித்து 5 மாணவர்கள் பலியானார்கள்.;

Update:2022-12-11 00:15 IST

நாசிக், 

புனே- நாசிக் நெடுஞ்சாலையில் டயர் வெடித்ததால் கார் பல்டி அடித்து 5 மாணவர்கள் பலியானார்கள்.

டயர் வெடித்து விபத்து

மராட்டிய மாநிலம் நாசிக் நகரில் உள்ள கே.டி.எச்.எம். தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சின்னார் தாலுகா சங்கம்நேர் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள காரில் புறப்பட்டு சென்றனர். பின்னர் நேற்று முன்தினம் மாலை காரில் நாசிக் நோக்கி திரும்பினர். காரில் மாணவர், மாணவிகள் என 8 பேர் பயணம் செய்தனர்.

புனே-நாசிக் நெடுஞ்சாலையில் மோகாதாரி காட் வனப்பகுதியில் கார் சென்றபோது திடீரென டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி எதிர்சாலையை நோக்கி பாய்ந்தது. அந்த வேகத்தில் மூன்று, நான்கு முறை பல்டி அடித்ததுடன், அந்த வழியாக வந்த 2 வாகனங்கள் மீதும் மோதியது.

5 பேர் பலி

இந்த விபத்தில் காரில் இருந்த 8 மாணவர்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். தகவல் அறிந்த சின்னார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். கார் விபத்தில் சிக்கிய 8 பேரையும் மீட்டனர். இதில் 3 மாணவர்கள், 2 மாணவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. படுகாயமடைந்த மற்ற 3 பேரையும் மீட்டு சின்னார் ஊரக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் சிக்கி 5 மாணவர்கள் பலியான சம்பவம் கல்லூரி மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்