ஜூனியர் கல்லூரி இயக்குனர், முதல்வர் உள்பட 6 பேர் கைது

12-ம் வகுப்பு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் ஜூனியர் கல்லூரி இயக்குனர், முதல்வர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;

Update:2023-03-12 00:30 IST

மும்பை, 

12-ம் வகுப்பு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் ஜூனியர் கல்லூரி இயக்குனர், முதல்வர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செல்போனில் கணித வினாத்தாள்

மராட்டியத்தில் 12, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடந்து வருகிறது. கடந்த 3-ந் தேதி கணித தேர்வு நடந்தது. மும்பை தாதரில் உள்ள தேர்வு மையத்தில் மாணவன் ஒருவன் செல்போனுடன் சிக்கினான். மாணவனின் செல்போனுக்கு தேர்வு தொடங்கும் முன்பே கணித வினாத்தாள் வந்து இருந்தது.

கணித தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக தேர்வு மைய நிர்வாகி சிவாஜி பார்க் போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கு விசாரணை குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. கணித வினாத்தாள் வெளியானது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அகமதுநகரில் இருந்து தாதர் வந்த வினாத்தாள்

விசாரணையின் போது அகமதுநகரில் உள்ள ஜூனியர் கல்லூரி மூலமாக வினாத்தாள் வெளியானது தெரியவந்தது. அந்த கல்லூரி ஆசிரியர் கல்வித்துறை அலுவலகத்தில் இருந்து ஜூனியர் கல்லூரிக்கு வினாத்தாளை எடுத்து சென்று இருக்கிறார். செல்லும் வழியில் அவர் வினாத்தாளை செல்போனில் படம் எடுத்து கசியவிட்டு உள்ளார். அவர் வினாத்தாளை ஜூனியர் கல்லூரியை சேர்ந்தவர்களுக்கு அனுப்பி உள்ளார்.

இதேபோல தனது சகோதரிக்கும் அனுப்பி இருக்கிறார். ஆசிரியரின் சகோதரி ரூ.10 ஆயிரத்துக்கு வினாத்தாளை விற்பனை செய்து உள்ளார். அப்படி விற்பனை செய்யப்பட்ட வினாத்தாள் தான் தாதரில் உள்ள பள்ளி மாணவருக்கு கிடைத்து தெரியவந்து உள்ளது.

கல்லூரி இயக்குனர், முதல்வர் கைது

போலீசார் கணித வினாத்தாள் வெளியான விவகாரத்தில் அகமதுநகர் ஜூனியர் கல்லூரி முதல்வர் பாவ்சாகிப் அம்ருதே (54), ஆசிரியர்கள் கிரண் திகே (28), சச்சின் மாகுனுர் (23), நிா்வாகி அர்ச்சனா பாம்ரே (23), டிரைவர் வைபவ் தாஸ்தே (29) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் கல்லூரி உரிமையாளர், இயக்குனருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

போலீசார் நேற்று முன்தினம் கல்லூரி இயக்குனர் அக்சய் பாம்பரேயை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கல்லூரி உரிமையாளரை தேடி வருகின்றனர். தங்களது கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கணித தேர்வில் வெற்றி பெற வேண்டும் என வினாத்தாளை கசியவிட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் கூறியுள்ளனர். ஆசிரியர் ஒருவர் ரூ.10 ஆயிரத்துக்கு சில மாணவர்களுக்கு வினாத்தாளை விற்பனையும் செய்து உள்ளார்.

மேலும் செய்திகள்