மும்பையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 6,285 பேருக்கு அபராதம்

மும்பையில் ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 6 ஆயிரத்து 285 பேருக்கு அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.;

Update:2022-06-10 18:28 IST

மும்பை,

மும்பையில் ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 6 ஆயிரத்து 285 பேருக்கு அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

ஹெல்மெட் கட்டாயம்

மும்பையில் சாலை விபத்துகளில் உயிரிழப்பு அதிகளவில் நடந்து வருவதால் மும்பை போக்குவரத்து போலீசார் அதிரடி உத்தரவை வெளியிட்டனர். இதில் இரு சக்கரவாகனங்களில் செல்பவர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டமாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும், இதனை மீறுபவர்களுக்கு 3 மாதம் உரிமம் ரத்து மற்றும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நடைமுறை கடந்த 9-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை கண்காணிக்க 50 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன.

6,285 பேர் சிக்கினர்

மும்பையில் போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனையில் இறங்கி உள்ளனர். இதில் முதல் நாளில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்ற 2 ஆயிரத்து 344 பேரும், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளின் பின்இருக்கையில் பயணித்த 3 ஆயிரத்து 421 பேரும், இருபிரிவிலும் 516 பேரும் சிக்கியதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

எனவே ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 6 ஆயிரத்து 285 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதில் தென் மும்பையில் மட்டும் சுமார் 3 ஆயிரத்து 100 பேர் சிக்கி உள்ளனர்.

இதுத்தவிர கடந்த 8-ந் தேதி சாலையில் தேவையின்றி ஹாரன் ஒலி எழுப்பியதாக 2 ஆயிரத்து 500 பேருக்கு அபராதம் விதித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்