அதிக வருமானம் தருவதாக கூறி சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ.77 லட்சம் அபேஸ்
அதிக வருமானம் தருவதாக கூறி சாப்ட்வேர் என்ஜினீயரிடம் இருந்து ரூ.77 லட்சம் அபேஸ் செய்த கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.;
மும்பை,
அதிக வருமானம் தருவதாக கூறி சாப்ட்வேர் என்ஜினீயரிடம் இருந்து ரூ.77 லட்சம் அபேஸ் செய்த கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவர்ச்சி திட்டம்
மும்பையை சேர்ந்த சாப்ட்வேட் என்ஜினீயர் கடந்த 2020-ம் ஆண்டு ஆன்லைனில் விளம்பரம் ஒன்றை கண்டார். இதில் குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்து முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என கூறப்பட்டு இருந்தது. இதனை நம்பிய என்ஜினீயர் செயலியை பதிவிறக்கம் செய்தார். அப்போது சென்னையில் இருந்து நபர் ஒருவர் அழைப்பு விடுத்து பேசினார்.
அப்போது தாங்கள் விவசாய பொருட்கள் விற்பனை செய்வதாகவும், நைஜீரியா நாட்டை சேர்ந்த கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்து கவர்ச்சி திட்டங்களை அறிவித்து உள்ளதாகவும், 15 சதவீதம் லாபம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
ரூ.77 லட்சம் அபேஸ்
இதை நம்பிய சாப்ட்வேர் என்ஜினீயர் ரூ.1 லட்சம் முதலீடு செய்தார். இதன் மூலம் அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ.16 ஆயிரம் வருமானம் கிடைத்தது. இதனால் அவர் தன்னிடம் இருந்த மொத்தம் ரூ.76 லட்சத்து 11 ஆயிரத்தை வெவ்வேறு சந்தர்ப்பத்தில் முதலீடு செய்தார். இதன் மூலம் ரூ.25 லட்சத்து 24 ஆயிரம் வருமானம் கிடைத்தது. மீதி ரூ.50 லட்சத்து 86 ஆயிரம் திரும்ப கிடைக்கவில்லை.
இது பற்றி விசாரித்தபோது அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.