வக்கோலாவில் மின்சாரம் தாக்கி 7 வயது சிறுமி பலி
வக்கோலாவில் மின்சாரம் தாக்கி 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். மேலும் 2 சிறுமிகள் படுகாயம் அடைந்தனர்.;
மும்பை,
வக்கோலாவில் மின்சாரம் தாக்கி 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். மேலும் 2 சிறுமிகள் படுகாயம் அடைந்தனர்.
மின்சாரம் தாக்கியது
வக்கோலா தாவரி நகரை சேர்ந்த சிறுமி ஷெகரீன் சேக்(வயது7). இவள் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் வீட்டருகே வசிக்கும் தோழிகள் தன்ஷிகா, வைஷ்ணவி ஆகியோருடன் விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது, சிறுமி ஷெகரீன் சேக் அங்கிருந்த நீண்ட இரும்பு கம்பியை தூக்கி விளையாடியதாக தெரிகிறது. இதில், இரும்பு கம்பி அந்த பகுதியில் தொங்கிக்கொண்டிருந்த மின் வயரில் பட்டது. இதில் சிறுமி மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டாள். மேலும் அவளுடன் விளையாடி கொண்டு இருந்த சிறுமிகள் தன்ஷிகா, வைஷ்ணவியையும் மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு வி.என். தேசாய் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
சிறுமி பலி
இதில், சிறுமி ஷெகரீன் சேக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமியின் மரணத்துக்கு பாதுகாப்பு இல்லாமல் மின் ஒயரை தொங்கவிட்டிருந்த தனியார் மின் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வக்கோலா போலீசார் தனியார் மின்நிறுவன ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.