மும்பை,
நாக்பூர் நகரில் இருந்து மும்பை மாநகருக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, எங்கிருந்தோ வந்த ஒரு தேள், பெண் பயணி ஒருவரை கடித்து விட்டது. இதில் அவர் வலியால் அலறினார். அந்த விமானம் மும்பையில் தரை இறங்கியபோது, விமான நிலையத்தில் அவருக்கு டாக்டர் முதல் உதவி அளித்தார். அதைத் தொடர்ந்து அந்த பெண் பயணி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அதன் பின்னர் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்த சம்பவம் விமான பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்துக்காக ஏர் இந்தியா நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. இது மிக மிக அரிதான, துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்று அந்த நிறுவனம் தெரிவித்தது. கடந்த 23-ந் தேதி நடந்த சம்பவம் பற்றிய தகவல் இப்போதுதான் பொதுவெளியில் கசிந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோழிக்கோட்டில் இருந்து துபாய்க்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சரக்குகள் வைக்கக்கூடிய பகுதியில் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.