வணிக வளாக கட்டிடத்தில் தீ விபத்து

Update:2023-06-02 00:15 IST

மும்பை, 

மும்பை அந்தேரி கிழக்கு சீப்ஸ் பகுதியில் உள்ள வணிக வளாக கட்டிடத்தின் ஒரு பகுதியில் நேற்று நள்ளிரவு 12.15 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மள மளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அங்கு கரும்புகை சூழ்ந்தது. இதனால் கட்டிடத்தில் இருந்தவர்கள் அலறி அடித்தபடி வெளியே ஓடிவந்தனர். இதில் 2 மாடியில் இருந்த 2 காவலாளிகள் கீழே வரமுடியாமல் கரும்புகையில் சிக்கி கொண்டனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 12 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மாடியில் சிக்கி கொண்ட 2 காவலாளியையும் ராட்சத ஏணி மூலம் மீட்டு பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர். பின்னர் கட்டிடத்தில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கட்டிடத்தின் அடித்தளத்திற்குள் பிடித்த தீயை அணைக்க பல்வேறு மீட்பு கருவிகளை கொண்டு தரைகளை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தீயணைப்பு படை அதிகாரி தெரிவித்தார். இந்த தீ விபத்தில் அங்கிருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்