15 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ

தென்மும்பையில் உள்ள 15 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் 7 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.;

Update:2023-05-29 00:15 IST

மும்பை, 

தென்மும்பையில் உள்ள 15 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் 7 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்து

தென்மும்பையில் புலாபாய் தேசாய் சாலையில் பிரபலமான தனியார் ஆஸ்பத்திரி அருகே 15 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 12-வது மாடியில் நேற்று முன்தினம் இரவு 10.24 மணி அளவில் கியாஸ் சிலிண்டர்கள் திடீரென வெடித்து சிதறியது. இதனால் வீட்டில் தீப்பிடித்தது. இதனால் கரும்புகை குபு குபு வென வெளியேறியது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள் சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே தீ மள மளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 7 ஜம்போ தண்ணீர் டேங்கர்கள் மற்றும் 8 வாகனங்களில் கட்டிடத்திற்கு விரைந்து சென்றனர்.

7 மணி நேரம் போராடினர்

தீ விபத்து நடந்த 12-வது மாடிக்கு சென்று அங்கு சிக்கி இருந்த ஆண் மற்றும் பெண் 2 பேரை மீட்டு பத்திரமாக கீழே கொண்டு வந்தனர். இதையடுத்து அங்கு பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 7 மணி நேரம் போராடி நேற்று அதிகாலை 3.55 மணி அளவில் தீயை முற்றிலும் அணைத்தனர். தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆஸ்பத்திரி அருகே நடந்த தீ விபத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்