பெண்ணை மது குடிக்க வைத்து கற்பழித்த போலீஸ்காரருக்கு வலைவீச்சு
உதவி கேட்ட பெண்ணை மது குடிக்க வைத்து கற்பழித்த போலீஸ்காரர் மற்றும் காதலியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
வசாய்,
உதவி கேட்ட பெண்ணை மது குடிக்க வைத்து கற்பழித்த போலீஸ்காரர் மற்றும் காதலியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அறிமுகமான போலீஸ்காரர்
வசாயை சேர்ந்த 31 வயது பெண்ணின் கணவர் ஒருவர் உடற்பயிற்சி மையம் நடத்தி வருகிறார். பெண்ணிற்கு கடந்த 2021-ம் ஆண்டு புத்தாண்டு விருந்தின் போது வசாய் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வரும் ராகுல் லோண்டே என்பவரின் அறிமுகம் ஏற்பட்டது. அப்போது ராகுல் லோண்டேவின் காதலியான பிரியா உபாத்யா என்பவரையும் அப்பெண்ணிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்பிறகு அப்பெண் போலீஸ்காரர் ராகுல் லோண்டே, காதலி பிரியாவை அடிக்கடி சந்தித்து நண்பர்களாக பழகி வீட்டில் நடைபெறும் விருந்துகளில் பங்கேற்று வந்தனர்.
கற்பழிப்பு
இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந்தேதி அப்பெண்ணிற்கும், கணவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பெண்ணின் கணவர் வீட்டை விட்டு வெளியேறினார். இதன்பிறகு இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் மனஉளைச்சல் அடைந்த பெண், போலீஸ்காரர் ராகுல் லோண்டேவின் உதவியை நாடினார்.
இதையடுத்து அப்பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டில் இருந்த காதலி பிரியாவுடன் அப்பெண்ணிற்கு மது விருந்து அளித்தார். முதலில் மறுத்த அப்பெண்ணிற்கு கட்டாயப்படுத்தி மதுவை குடிக்க வைத்தனர். போதையில் இருந்த அப்பெண்ணை போலீஸ்காரர் ராகுல் லோண்டே கற்பழித்தார்.
போலீஸ் வலைவீச்சு
இதற்கு உடந்தையாக காதலி பிரியாவும் இருந்தார். மயக்கம் தெளிந்த அப்பெண் நடந்த சம்பவத்தை உணர்ந்தார். இதனால் அவர்கள் மீது புகார் அளிக்க போவதாக தெரிவித்ததால் கொலை மிரட்டல் விடுத்தனர். பயந்து போன அப்பெண் மிராபயந்தர்-வசாய்விரார் போலீஸ் கமிஷனரகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையில் போலீஸ்காரர் ராகுல் லோண்டே, அவரது காதலி பிரியா தலைமறைவாகி விட்டதால் போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.