மனைவியை ரெயில் முன் தள்ளி கொலை செய்த வாலிபர் கைது- பிவண்டியில் சிக்கினார்

வசாய் ரோடு ரெயில் நிலையத்தில் ரெயில் முன் தள்ளி மனைவியை படுகொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-08-23 20:21 IST

மும்பை,

வசாய் ரோடு ரெயில் நிலையத்தில் ரெயில் முன் தள்ளி மனைவியை படுகொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ரெயில் முன் தள்ளி கொலை

பால்கர் மாவட்டம் வசாய் ரோடு ரெயில் நிலையம் வழியாக நேற்று முன்தினம் அதிகாலை அவாத் எக்ஸ்பிரஸ் சென்றது. அந்த ரெயில் சென்ற பிறகு தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார்.

இது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், கணவரே மனைவியை ரெயில் முன் தள்ளி கொலை செய்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த தம்பதி தங்களது 2 குழந்தைகளுடன் பிளாட்பாரத்தில் படுத்து தூங்கி உள்ளனர். பின்னர் திடீரென எழுந்த கணவர், ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மனைவியை ரெயில் வரும் வேளையில் தள்ளி கொன்று விட்டு, தனது 2 குழந்தைகளுடன் தப்பி சென்றார்.

கைது

இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், சுமார் 30 வயது வாலிபரான அவர் பிவண்டியில் பதுங்கி இருந்தபோது சிக்கினார்.

வாலிபரின் நண்பர் ஒருவருடன் அவரது மனைவிக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த நபருடன் இவரது மனைவி 2 நாட்கள் வெளியில் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவர் இந்த கொடூர கொலையை செய்தது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்