22 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ

Update:2022-12-04 00:15 IST

மும்பை, 

மும்பை மலாடில் ஜனகல்யாண் நகர் பகுதியில் 22 மாடி கொண்ட 'மரினா என்கிளவ்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 3-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பால்கனி வழியாகவும் தீ கொழுந்து விட்டு எரிந்தது பார்ப்போரை அச்சுறுத்தும் வகையில் இருந்தது. இதற்கிடையே தீ விபத்தால் அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு மக்கள் கட்டிடத்தில் இருந்து அலறியடித்து வெளியேறினர். ஒருவர் மட்டும் பால்கனிக்கு வெளியே சிலாப்பில் மீது நின்று கொண்டு பரிதவித்தார். இதனை கண்ட மற்ற குடியிருப்பு வாசிகள் ஏணியை வைத்து அவர் கீழே இறங்க உதவி செய்தனர்.

மேலும் தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 4 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 15 நிமிடத்தில் கட்டிடத்தில் பற்றிய தீயை முற்றிலும் அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்