மின்சார தடையால் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் பலி- உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
மின்தடை காரணமாக வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் பலியானார். உறவினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.;
புனே,
மின்தடை காரணமாக வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் பலியானார். உறவினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மின்சாரம் துண்டிப்பு
கோலாப்பூர் மாவட்டம் கர்வீர் தாலுகா உச்காவ் கிராமத்தை சேர்ந்தவர் அமேஷ் காலே (வயது38). இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு நுரையீரல் நோய் தொற்று ஏற்பட்டது. இதற்காக அவர் வீட்டில் இருந்த படியே வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அந்த வீட்டில் மின்கட்டணம் செலுத்த வில்லை என மின்வாரிய ஊழியர்கள் கடந்த 30-ந் தேதி மின் இணைப்பை துண்டித்து விட்டு சென்றனர். இதனால் வென்டிலேட்டர் இயங்காததால் அமோல் காலே பாதிக்கப்பட்டார். வீட்டில் இருந்தவர்கள் மாற்று ஏற்பாடு செய்து வென்டிலேட்டருக்கு மின்இணைப்பு கொடுத்தனர்.
நோயாளி பலி
இந்த நிலையில் நேற்று அங்கு பலத்த மழை பெய்தது. அப்போது மின்தடை ஏற்பட்டதால் வென்டிலேட்டர் செயல்படவில்லை. இதனால் நோயாளி அமோல் காலே மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த குடும்ப உறுப்பினர்கள், மின்வினியோக நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு, வாலிபரின் உடல் பிரேத பரிசோனை நடந்த அரசு ஆஸ்பத்திரி முன் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.