டெல்லியில் அமித்ஷாவுடன் அஜித்பவார் சந்திப்பு; புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு குறித்து முக்கிய ஆலோசனை
டெல்லியில் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களை அஜித்பவார், பிரபுல் படேல் சந்தித்து பேசினர்.;
மும்பை,
டெல்லியில் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களை அஜித்பவார், பிரபுல் படேல் சந்தித்து பேசினர்.
இலாகா ஒதுக்கீடு விவகாரம்
மராட்டியத்தில் கடந்த 2-ந் தேதி நடந்த அரசியல் மாற்றத்தில் சிவசேனா- பா.ஜனதா கூட்டணி அரசில், தேசியவாத காங்கிரசை உடைத்து வெளியே வந்த அஜித்பவார் தலைமையிலான அணியினர் இணைந்தனர். அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர். இருப்பினும் அஜித்பவார் உள்பட 9 மந்திரிகளுக்கு இன்னும் இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மேலும் மராட்டிய மந்திரி சபையில் 43 பேர் பதவி ஏற்க முடியும். தற்போது சிவசேனா மற்றும் பா.ஜனதாவை சேர்ந்த தலா 10 பேர் மற்றும் அஜித்பவார் தரப்பை சேர்ந்த 9 பேருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டு உள்ளது. மந்திரி சபையில் மொத்தம் 29 பேர் அங்கம் வகித்து உள்ளனர். இன்னும் 14 பேருக்கு மந்திரி பதவி வழங்க முடியும்.
தேர்தல் கமிஷனில் கடிதம்
அரசின் பதவி காலம் அடுத்த ஆண்டு இறுதியில் முடியும் நிலையில் முழுமையான மந்திரி சபை அமையாமல் உள்ளது. தற்போது கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள 3 கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் பலர் மந்திரி பதவிக்காக காத்திருக்கின்றனர். புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு செய்வதிலும், மந்திரி சபை விரிவாக்கத்திலும் தொடர் இழுபறி நீடித்து வருகிறது. தேசியவாத காங்கிரஸ் நிதி, நீர்வளத்துறை போன்ற முக்கிய இலாகாக்களை கேட்பதாக தெரிகிறது. ஆனால் அதற்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. மற்றொரு பக்கம் அஜித்பவார் தரப்பு தாங்கள் தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கொடுத்து உரிமை கோரி உள்ளது.
அமித்ஷாவுடன் சந்திப்பு
இதுபோன்ற பரபரப்புக்கு மத்தியில் துணை முதல்-மந்திரி அஜித்பவார், அவரது ஆதரவு எம்.பி.யான தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் படேல் நேற்று முன்தினம் மாலை திடீரென டெல்லி புறப்பட்டு சென்றனர். அவர்கள் இரவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பா.ஜனதா மூத்த தலைவர்களை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது மராட்டிய புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு, மந்திரி சபை விரிவாக்கம், தேசியவாத காங்கிரசுக்கு மத்திய மந்திரி சபையில் இடம் போன்றவை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பிரபுல் படேல் கூறினார். நாங்கள் மராட்டிய அரசில் இணைந்த பிறகு இப்போது தான் பா.ஜனதா தலைவர்களை முறைப்படி சந்தித்து உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.