மும்பையில் கட்டப்பட்டு வரும் அம்பேத்கர் நினைவகத்தை பார்த்து உலகமே பொறாமைப்படும்- முதல்-மந்திரி ஷிண்டே பேச்சு
உலகமே பொறாமைப்படும் வகையில் மும்பையில் அம்பேத்கர் நினைவகம் விரைவில் கட்டி முடிக்கப்படும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பேசினார்.;
மும்பை,
உலகமே பொறாமைப்படும் வகையில் மும்பையில் அம்பேத்கர் நினைவகம் விரைவில் கட்டி முடிக்கப்படும் என மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பேசினார்.
சைத்ய பூமி
சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் 1956-ல் மறைந்தபோது அவரது உடல் மும்பை தாதர் பகுதியில் தகனம் செய்யப்பட்டது. சைத்ய பூமி என்று அழைக்கப்படும் இங்கு அவரது நினைவு நாளையொட்டி தலைவர்கள், பொதுமக்கள் சாரை, சாரையாக வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். நேற்று அம்பேத்கரின் 66-வது நினைவு நாளையொட்டி சைத்ய பூமியில் அஞ்சலி செலுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
அஞ்சலி செலுத்துவதற்காக மராட்டியத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களிலும் இருந்தும் ஏராளமான மக்கள் கடந்த 2 நாட்களாக வருகை தந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் தங்குவதற்கு வசதியாக பிரமாண்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
தலைவர்கள் அஞ்சலி
இந்தநிலையில் நேற்று காலையில் மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் தாதர் சைத்ய பூமியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், புத்த துறவிகள் உடன் இருந்தனர்.
அதன்பிறகு நடந்த அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சியில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பேசியதாவது:-
உலகம் பொறாமைப்படும் வகையில்...
தாதரில் உள்ள இந்து மில் பகுதியில் கட்டப்பட்டு வரும் அம்பேத்கர் பிரமாண்ட நினைவகம் அற்புதமான தெய்வீக நினைவுச்சின்னமாகும். இது உலகமே பொறாமை கொள்ளும் வகையில் விரைவில் கட்டி முடிக்கப்படும்.
தாதரில் உள்ள அம்பேத்கர் வீடு 'ராஜ்குருக்', வரலாற்று பொக்கிஷம். அம்பேத்கர் தொடர்பான அனைத்து பொருட்களும் இங்கு பாதுகாக்கப்படும். லோயர் பரேல் பகுதியில் உள்ள அம்பேத்கரின் மற்றொரு நினைவிடமும் ஆய்வு செய்யப்படும். சிறந்த மனிதர்கள் வரலாறு படைப்பாா்கள், ஆனால் அம்பேத்கர் வரலாற்றை மாற்றியவர். அவர் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு சுயமரியாதையை ஊட்டியவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
பட்னாவிஸ் பேச்சு
துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில், "அம்பேத்கர் தந்த சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயத்திற்கான செய்தி, உலக நலனுக்கான செய்தி. அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டத்தால் தான் டீ விற்றவரின் மகனான தன்னால் பிரதமராக முடிந்தது என்று மோடியும் தெரிவித்துள்ளார். இது அரசியலமைப்பின் அதிகாரம் என்று நான் உணருகிறேன்" என்றார்.
மும்பையில் சைத்ய பூமி அருகே உள்ள இந்து மில் வளாகத்தில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் அம்பேத்கருக்கு பிரமாண்ட நினைவகம் கட்டப்பட்டு வருகிறது. இதில் பீடத்துடன் அவரது பிரமாண்ட உருவ சிலை 450 அடி உயரத்தில் அமைய இருப்பது குறிப்பிடத்தக்கது.