பணமோசடி வழக்கில் அனில் தேஷ்முக் உதவியாளருக்கு ஜாமீன்- சிறப்பு கோர்ட்டு வழங்கியது
மும்பை,
தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் அனில் தேஷ்முக் உள்துறை மந்திரியாக இருந்தபோது அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பார்கள், ஓட்டல்களில் இருந்து ரூ.4 கோடியே 70 லட்சம் வசூலித்ததாக கூறப்படும் வழக்கில் அவரது உதவியாளர் குந்தன் ஷிண்டேவை கடந்த 2021-ம் ஆண்டு அமலாக்கத்துறை கைது செய்தது.
இந்த வழக்கில் ஜாமீன் வழங்ககோரி குந்தன் ஷிண்டே மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, குந்தன் ஷிண்டே தரப்பில் ஆஜரான வக்கீல், அவரை தொடர்ந்து காவலில் வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது. அதிகார துஷ்பிரயோகம் என வாதிட்டார். அவரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இருப்பினும் சி.பி.ஐ. விசாரித்து வரும் ஊழல் வழக்கில் குந்தன் ஷிண்டே குற்றவாளியாக இருப்பதால் அவர் தொடர்ந்து சிறையில் இருக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.