அரசு பஸ்சில் பெண்களுக்கு கட்டண சலுகை- மராட்டிய பட்ஜெட்டில் அறிவிப்பு

மராட்டிய பட்ஜெட்டில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பால்தாக்கரே பெயரில் 700 கிளினிக்குகள், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.;

Update:2023-03-10 00:15 IST

மும்பை, 

மராட்டிய சட்டசபையில் நேற்று 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் (வரவு-செலவு திட்ட அறிக்கை) தாக்கல் செய்யப்பட்டது.

பட்னாவிசின் முதல் பட்ஜெட்

நிதி இலாகாவை கவனித்து வரும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்த முதல் பட்ஜெட். மேலும் ஏக்நாத் ஷிண்டே அரசு அமைந்த பிறகு தாக்கல் ஆன முதல் பட்ஜெட் ஆகும்.

இந்த பட்ஜெட் "பஞ்ச அமிர்தம்" என்று தேவேந்திர பட்னாவிஸ் வர்ணனை செய்தார். அதாவது விவசாயிகள், பெண்கள் நலன், உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய 5 அம்சங்களை கொண்டது ஆகும்.

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:-

பெண் குழந்தைகளுக்கு மானியம்

* பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் 'லெக் லட்கி' என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. அதன்படி மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களில் பெண் குழந்தை பிறந்தவுடன் ரூ.5 ஆயிரம் மானியம் வழங்கப்படும். அதை தொடர்ந்து குழந்தை 1-ம் வகுப்பு படிக்கும்போது ரூ.4 ஆயிரமும், 6-ம் வகுப்பை எட்டும்போது ரூ.6 ஆயிரமும், 11-ம் வகுப்பில் ரூ.8 ஆயிரமும் வழங்கப்படும். அதேபோல அந்த பெண் குழந்தை 18 வயதை அடையும்போது ரூ.75 ஆயிரம் ரொக்கத்தொகை வழங்கப்படும்.

* ரூ.25 ஆயிரம் வரை மாத சம்பளம் வாங்கும் பெண்களுக்கு தொழில் வரி கிடையாது. இது முன்பு ரூ.10 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதேபோல மாற்று திறனாளிகளுக்கும் தொழில் வரி சலுகை வழங்கப்பட்டு உள்ளது.

அரசு பஸ்சில் கட்டண சலுகை

* மராட்டிய அரசு போக்குவரத்து கழக (எம்.எஸ்.ஆர்.டி.சி) பஸ்சில் பெண்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் ரூ.50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

* பாலியல் சுரண்டல், குடும்ப வன்முறை போன்ற கொடுமைகளால் பாதிக்கப்பட்டு துயரத்தில் உள்ள பெண்களுக்கு தங்குமிடம் வழங்குவதற்கு 'சக்தி சதன்' என்ற திட்டம், மத்திய அரசின் உதவியுடன் தொடங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தங்குமிடம், சட்ட உதவி, மருத்துவ சிகிச்சை ஆகியவை வழங்கப்படும். அந்த திட்டத்தின் கீழ் 50 சக்தி சதன் தொடங்கப்படும்.

* பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கும்போது முத்திரைதாள் வரியில் ஒரு சதவீத சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த குடியிருப்பை 15 ஆண்டுக்கு ஆண்களுக்கு விற்க முடியாது என்ற விதிமுறை இருந்தது. தற்போது இந்த நிபந்தனை தளர்த்தப்பட்டு உள்ளது.

பால்தாக்கரே கிளினிக்

* மும்பையில் சமீபத்தில் பால்தாக்கரே பெயரில் கிளினிக்குகள் (ஆப்ளா தவாக்கானா) தொடங்கப்பட்டுள்ளன. இந்த கிளினிக்குகள் தாராவி உள்ளிட்ட பல இடங்களில் உள்ளன. பொது மக்களுக்கு இவை பயன் உள்ளதாக உள்ளது. எனவே இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மராட்டியம் முழுவதும் 700 பால்தாக்கரே கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளது.

இந்த கிளினிக்குகளில் பொதுமக்கள் இலவசமாக மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொள்ள முடியும்.

நல வாரியங்கள்

* 3 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்கள் வழங்க மராட்டிய மாநில அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்படும்.

ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்களுக்கான நலத்திட்டங்களை அமல்படுத்த மராட்டிய மாநில ஆட்டோ ரிக்சா, டாக்சி டிரைவர், உரிமையாளர்கள் நல கழகம் அமைக்கப்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ளது.

நல கழகம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானதற்கு ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆட்டோ டிரைவராக வாழ்க்கையை தொடங்கியவர் ஆவார். அவர் முதல்-மந்திரியான பிறகு ஆட்டோ டிரைவர்களுக்கு அரசு சார்பில் நலத்திட்டங்கள் கொண்டு வரப்படும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்