டாடா- ஏர்பஸ் நிறுவன திட்டம் உத்தவ் தாக்கரே ஆட்சியில் தான் குஜராத்திற்கு கைமாறியது- தேவேந்திர பட்னாவிஸ் பதில்
உத்தவ் தாக்கரே ஆட்சி காலத்தில் தான் டாடா- ஏர்பஸ் நிறுவனம் குஜராத்திற்கு கைமாறியதாக தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.;
மும்பை,
உத்தவ் தாக்கரே ஆட்சி காலத்தில் தான் டாடா- ஏர்பஸ் நிறுவனம் குஜராத்திற்கு கைமாறியதாக தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
கடுமையான விமர்சனம்
ஐரோப்பாவின் ஏர்பஸ் மற்றும் டாடா நிறுவனம் இணைந்து இந்திய விமான படைக்கு சி-295 ரக ராணுவ விமானங்களை தயாரிக்க உள்ளது. இந்த தொழிற்சாலை மராட்டியத்தில் உள்ள நாக்பூர் அருகில் அமைய இருந்தது. இதற்கான முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டு வந்தது.
இந்தநிலையில் போர் விமானம் தயாரிக்கும் திட்டம் குஜராத் மாநிலம் வதோதராவுக்கு சென்று உள்ளது.
சமீபத்தில் தான் மராட்டியத்துக்கு வர இருந்த வேதாந்தா நிறுவனத்தின் ரூ.1½ லட்சம் கோடி செமிகன்டக்டர் ஆலை திட்டம் குஜராத்துக்கு சென்றது. இந்தநிலையில் டாடா-ஏர்பஸ் திட்டமும் குஜராத் மாநிலத்துக்கு சென்ற விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மாநில அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இதுகுறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-
முதலீட்டுக்கு தகுதியற்றது...
மாநிலத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதிலும் நான் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி எனது சாகர் இல்லத்திற்கு டாடா ஏர்பஸ் நிறுவன அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் அழைத்து பேசினேன்.
மேலும் மூத்த தலைவர் என்ற முறையில் மராட்டியத்தில் திட்டத்தை தொடர அப்போதைய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவிடம் பேசுவதாகவும் கூறினேன். ஆனால் அவர்கள் என்னிடம் மாநிலத்தில் நிலவும் சூழல் முதலீட்டுக்கு தகுதியற்றது என தெரிவித்தனர்.
நான் ஆட்சியில் இருந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டுவரை இந்த நிறுவனங்களை பின்தொடர்ந்தேன். உத்தவ் தாக்கரே தலைமையிலான புதிய அரசு அமைக்கப்பட்ட பிறகு முன்பு எடுக்கப்பட்ட சில முடிவுகள் மாற்றப்படுவதை நான் கவனித்தேன்.
டாடா ஏர்பஸ் கூட்டமைப்பின் அதிகாரிகளிடம் ஆரம்ப கட்ட சந்திப்பின்போது, திட்டம் மராட்டியத்தில் தொடங்கப்படுவதை உறுதிசெய்ய கூடுதல் வசதிகளை செய்துவருவதாக உறுதி அளித்திருந்தேன். ஆனால் 2019-ம் ஆண்டுக்கு பிறகு பொறுப்பேற்ற மாநில அரசு திட்டத்தை தக்கவைத்துக்கொள்ள எதுவும் செய்யவில்லை.
2½ ஆண்டுகள் வீணடிப்பு
உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருந்தபோதுதான் திட்டத்தை குஜராத்திற்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.
இந்த திட்டம் எனது சொந்த மாவட்டமான நாக்பூருக்கு வருவதால் அப்போதைய மாநில அரசு இந்த திட்டத்தை எதிர்த்திருக்க வாய்ப்பு உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பதில் மட்டுமே 2½ ஆண்டு காலத்தை வீணடித்த எதிர்க்கட்சிகள் தற்போது கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.