ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய போலீசார்- புனேயில் பரபரப்பு
புனேயில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு பிறகும் நடந்ததால் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.;
மும்பை,
புனேயில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு பிறகும் நடந்ததால் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இசை நிகழ்ச்சி
ஆஸ்கார் விருது பெற்ற பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சிக்கு மராட்டிய மாநிலம் புனே நகரில் நேற்று முன்தினம் இரவு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அங்குள்ள ராஜ் பகதூர் மில் வளாகத்தில் நடந்த அவரது இன்னிசையை கேட்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து இருந்தனர்.
ஏ.ஆர். ரகுமானின் இசை மழையில் ரசிகர்கள் ஆனந்தமாக நனைந்து கொண்டு இருக்க, நேரம் இரவு 10 மணியை தாண்டி விட்டது. அப்போது போலீஸ் அதிகாரி ஒருவர் திடீரென மேடை ஏறி இசைக்குழுவினரை நோக்கி கைகளை காட்டி நிகழ்ச்சியை நிறுத்தும் படி கேட்டுக்கொண்டார். உடனே ஏ.ஆர்.ரகுமானும், அவரது குழுவினரும் இசை நிகழ்ச்சியை நிறுத்தினர்.
பரபரப்பு
பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி நேர கட்டுப்பாட்டை மீறி நடந்ததும், அதை போலீசார் தடுத்து நிறுத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி பந்த்கார்டன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்தோஷ் பாட்டீல் கூறுகையில், "இசை நிகழ்ச்சி நடந்த இரவு 10 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அந்த நேரம் கடந்து விட்டதால் இசை நிகழ்ச்சியை நிறுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொண்டோம். உடனடியாக ஏ.ஆர்.ரகுமானும், அவரது குழுவினரும் இசை நிகழ்ச்சியை நிறுத்தி விட்டனர். எனவே வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை" என்றார்.