அம்ருதா பட்னாவிசை மிரட்டிய வழக்கில் கைதான சூதாட்ட தரகர் மனு தள்ளுபடி

Update:2023-04-04 00:15 IST

மும்பை, 

கிரிக்கெட் சூதாட்ட தரகர் அனில் ஜெங்சிங்லானியின் மகள் அனிக்சா தனக்கு ரூ.1 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா கூறினார். இதற்கு உடன்பட மறுக்கவே மிரட்டி ரூ.10 கோடி பறிக்க முயன்றதாக போலீசில் புகார் அளித்தார்.இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனிக்சாவை கடந்த 17-ந் தேதி கைது செய்தனர். தலைமறைவாக இருந்த அவரின் தந்தை அனில் ஜெய்சிங்லானி கடந்த 19-ந் தேதி குஜராத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் அனில் ஜெய்சிங்லானி, ஐகோர்ட்டில் தான் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு இருப்பதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஏ.எஸ். கட்காரி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கைது செய்து 24 மணி நேரத்திற்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். ஆனால் 36 மணி நேரத்திற்கு பிறகு தான் அனில் ஜெய்சிங்லானி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார் என அவரது வக்கீல் வாதாடினார்.

மேலும் இந்த வழக்கு அனைத்தையும் புகார் கொடுத்த அம்ருதா பட்னாவிசின் கணவர் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கண்காணிப்பதாகவும் குற்றம் சாட்டினார். ஆனால் அவரின் குற்றச்சாட்டுகளுக்கு அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அந்த மனு விசாரணைக்கு தகுதியில்லாது என கூறி தள்ளுபடி செய்தார். 

மேலும் செய்திகள்