கட்டுமான ஒப்பந்ததாரரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயற்சி- 2 பேருக்கு வலைவீச்சு

குர்லாவில் கட்டுமான ஒப்பந்ததாரரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2023-01-14 14:45 IST

மும்பை, 

குர்லாவில் கட்டுமான ஒப்பந்ததாரரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

துப்பாக்கியால் சுட்டனர்

மும்பை குர்லா கப்பாடியா நகர் பகுதியை சேர்ந்தவர் சூரஜ் சிங். கட்டுமான ஒப்பந்ததாரான இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் மாநகராட்சி எல். வார்டு அலுவலகத்திற்கு தனது நண்பருடன் காரில் சென்றார். அப்போது காரை வழிமறித்த 2 பேரில் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்த சம்பவத்தில் குறி தவறியதால் கட்டுமான ஒப்பந்ததாரர் சூரஜ் சிங் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் அங்கிருந்து காரை வேகமாக செலுத்தி வகோலா போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த விபரத்தை தெரிவித்தார்.

போலீசார் வலைவீச்சு

சம்பவம் நடந்த இடம் குர்லா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டதால் வழக்கை அங்கு மாற்றினர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அண்மையில் பாந்திரா-தகிசர் இடையே நடைபாதை கட்டும் பணிக்காக ரூ.45 கோடி அளவில் டெண்டர் பெற்றார்.

இதற்கிடையில் அவரது டெண்டர் ஒப்பந்ததை வாபஸ் பெறும்படி சமீர் சாவந்த் மற்றும் கணேஷ் சுகல் ஆகியோரிடம் இருந்து செல்போனில் மிரட்டல் வந்தது தெரியவந்தது. இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்களை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்