பங்கஜா முண்டேவுக்காக காங்கிரஸ் கட்சியின் கதவு திறந்திருக்கும்- பாலாசாகேப் தோரட் கூறுகிறார்
பங்கஜா முண்டேவுக்காக காங்கிரஸ் கட்சியின் கதவுகள் திறந்திருப்பதாக பாலாசாகேப் தோரட் கூறியுள்ளார்.;
மும்பை,
பங்கஜா முண்டேவுக்காக காங்கிரஸ் கட்சியின் கதவுகள் திறந்திருப்பதாக பாலாசாகேப் தோரட் கூறியுள்ளார்.
ராஜினாமா செய்யவேண்டும்
ஒடிசாவில் 3 ரெயில்கள் மோதி ஏற்பட்ட விபத்து நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பதுடன், பலர் காயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பாலாசாகேப் தோரட் கூறியதாவது:-
தற்போது உள்ள மத்திய அரசு இதுபோன்ற விஷயங்களில் உணர்திறன் மிக்கதாக இல்லை. இதுபோன்ற விபத்துகளை தடுக்கும் என்று கூறப்படும் 'கவச்' விபத்து தடுப்பு தொழில்நுட்பத்திற்கு இந்த விபத்தின்போது என்ன நடந்தது என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பிரதமர் தலைமைதாங்கி நடத்தும் புதிய ரெயில்வே திட்டங்களில் கூட ரெயில்வே மந்திரியை பார்க்க முடியவில்லை. இந்த துயர சம்பவத்திற்கு பொறுப்பேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கதவு திறந்திருக்கும்
மேலும் பா.ஜனதா முன்னாள் மந்திரி பங்கஜா முண்டே கட்சியில் ஓரம்கட்டப்படுவதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "பங்கஜா முண்டே மறைந்த பா.ஜனதா மூத்த தலைவர் கோபிநாத் முண்டேவின் மகள். அவர் கட்சி வேறுபாடுகளை கடந்து அனைவருடனும் சிறந்த உறவை கொண்டிருந்தார். மேலும் மராட்டியத்தில் பா.ஜனதாவின் வளர்ச்சிக்கு பங்களித்தார். பங்கஜா முண்டே கட்சியில் ஓரங்கட்டப்படுவது வருத்தம் அளிக்கிறது. அவருக்காக காங்கிரஸ் கட்சியின் கதவுகள் திறந்திருக்கிறது" என்றார்.