மும்பை டாடா கல்வி நிறுவனத்தில் பி.பி.சி. ஆவண படத்தை திரையிட்ட மாணவர்களால் பரபரப்பு
மும்பை,
மும்பை டாடா கல்வி நிறுவனத்தில் குஜராத் கலவரம் தொடர்பான பி.பி.சி. ஆவண படத்தை மாணவர்கள் திரையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பி.பி.சி. ஆவண படம்
குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட இன கலவரத்துக்கு அப்போது அந்த மாநில முதல்-மந்திரியாக இருந்த தற்போதைய பிரதமர் மோடிக்கு தொடர்பு உள்ளதாக இங்கிலாந்தை சேர்ந்த பி.பி.சி. செய்தி நிறுவனம் ஒரு ஆவண படத்தை தயாரித்து வெளியிட்டு உள்ளது.
சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தை இந்தியாவில் வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. அரசின் தடையை மீறி நாட்டில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் அந்த ஆவண படத்தை திரையிட்டு வருகின்றனர்.
டாடா கல்வி நிறுவனம்
இந்தநிலையில் நேற்று முன்தினம் மும்பையில் உள்ள பிரபல டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தில் குஜராத் கலவரம் தொடர்பான ஆவண படம் திரையிடப்படும் என மாணவர் அமைப்பினர் அறிவித்து இருந்தனர். கல்வி நிறுவன வளாகத்தில் தடை செய்யப்பட்ட ஆவண படத்தை திரையிட வேண்டாம் என கல்லூரி நிர்வாகம் எச்சரித்து இருந்தது. எனினும் எச்சரிக்கையையும் மீறி மாணவர்கள் நேற்று முன்தினம் டாடா கல்வி நிறுவன வளாகத்தில் தடை செய்யப்பட்ட ஆவண படத்தை திரையிட்டனர். பெரிய திரையில் ஆவண படத்தை திரையிட முடியாததால் மாணவர்கள் 10 மடிக்கணினியில் படத்தை திரையிட்டனர். பல மாணவர்கள் செல்போனில் படத்தை பார்த்தனர்.
பா.ஜனதா போராட்டம்
இதற்கிடையே தடைசெய்யப்பட்ட ஆவண படம் திரையிடப்படுவதை கண்டித்து டாடா கல்வி நிறுவனம் வாசலில் பா.ஜனதா இளைஞர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பா.ஜனதா இளைஞர் அணியினரை கலைந்துபோக வைத்தனர்.
எதிர்ப்பை மீறி ஆவணப்படத்தை திரையிட்ட மாணவர்களுக்கு பி.எஸ்.எப்., டாடா கல்வி நிறுவன மாணவர் அமைப்பு பாராட்டு தெரிவித்து உள்ளது.
மேலும் அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "பா.ஜனதாவின் எதிர்ப்பு, டாடா கல்வி நிறுவனத்துக்கு எதிரான தவறான பிரசாரம், கல்வி நிறுவனம் ஒத்துழைப்பு வழங்க மறுத்த நிலையிலும் 200-க்கும் அதிகமான மாணவர்கள் அவர்களின் வீரத்தை காட்டி உள்ளனர். மாணவர்கள் டாடா கல்வி நிறுவனத்தின் கலாசாரமான விவாதம், ஆலோசனை போன்றவற்றை நிலைநாட்டி உள்ளனர்.
பா.ஜனதா குண்டர்கள் அமைதியை சீர்குலைப்பதாக மிரட்டியபோதும் நாங்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்து எங்கள் பேச்சுரிமையை பாதுகாத்து உள்ளோம்" என கூறப்பட்டுள்ளது.
போலீசில் புகார்
இதற்கிடையே தடையை மீறி ஆவண படத்தை திரையிட்ட மாணவர்கள் மீது பா.ஜனதா இளைஞர் அணியினர் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.