தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா இணைந்து போட்டி- பா.ஜனதா மாநில தலைவர் தகவல்

அடுத்து ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா கட்சி இணைந்து போட்டியிடும், தொகுதி பங்கீடு குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என பா.ஜனதா மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறினார்.;

Update:2023-03-20 00:15 IST

மும்பை, 

அடுத்து ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா கட்சி இணைந்து போட்டியிடும், தொகுதி பங்கீடு குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என பா.ஜனதா மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறினார்.

முடிவு எடுக்கவில்லை

மராட்டிய சட்டசபை காலம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிகிறது. அதற்கு முன்பாகவே நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து, சட்டசபை தேர்தலும் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா - பா.ஜனதா தொகுதி பங்கீடு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பா.ஜனதா மாநிலத்தலைவர் சந்திரசேகர் பவன்குலே விளக்கம் அளித்து உள்ளார்.

முன்னதாக சட்டசபை தேர்தலில் ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு போட்டியிட 288 தொகுதிகளில், 48 தொகுதிகள் மட்டுமே கொடுக்கப்படும் என அவர் கூறியதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

200 தொகுதிகளில் வெற்றி

இந்தநிலையில் நேற்று முன்தினம் இதுபற்றி சந்திரசேகர் பவன்குலே கூறியதாவது:-

பா.ஜனதா- சிவசேனா இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் உள்ள 48 தொகுதிகளிலும், சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடனும் சேர்ந்து 288 தொகுதிகளிலும் போட்டியிடும். நரேந்திர மோடி தலைமையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஒத்துழைப்புடன் பா.ஜனதா, சிவசேனா 200 தொகுதிகளில் வெற்றி பெற தயாராகி வருகிறது.

தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டங்கள் நடந்தது. வரும் காலங்களிலும் நடைபெறும். தொகுதி பங்கீடு தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மாநில மற்றும் மத்திய தலைமை தான் அந்த முடிவை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்