மல்யுத்த வீராங்கனைகள் புகார் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- பா.ஜனதா பெண் எம்.பி. கருத்து
மல்யுத்த வீராங்கனைகள் புகார் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜனதா பெண் எம்.பி. பிரித்தம் முண்டே கூறியுள்ளார்.;
மும்பை,
மல்யுத்த வீராங்கனைகள் புகார் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜனதா பெண் எம்.பி. பிரித்தம் முண்டே கூறியுள்ளார்.
மல்யுத்த வீராங்கனைகள் புகார்
பா.ஜனதா எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நாட்டின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் தொந்தரவு புகார் அளித்து உள்ளனர். பிரிஜ் பூஷண் சரண் சிங் பதவி விலகவும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் ஏப்ரல் 23-ந் தேதி முதல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஒலிம்பிக் பதக்கங்களை கங்கை நதியில் வீச முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜனதா எம்.பி. பிரித்தம் முண்டே நேற்று மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:-
நான் எம்.பி.யாக இல்லாமல் பெண்ணாக கூறுகிறேன், இதுபோன்ற புகார்கள் எந்த பெண்ணிடம் இருந்து வந்தாலும் அது பற்றி விசாரணை நடத்தி இருக்க வேண்டும். புகாரை ஆய்வு செய்ய வேண்டும். விசாரணைக்கு பிறகு புகார் சரியா, தவறா என்பது பற்றி அதிகாரிகள் முடிவு எடுத்து கொள்ளலாம். விசாரணை நடத்தப்படவில்லை எனில், அது ஜனநாயகத்தில் வரவேற்கப்படாது. இந்த விவகாரம் தற்போது சர்வதேச அளவில் சென்றுவிட்டது. இப்போது நான் கமிட்டி அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தால், அது விளம்பரம் தேடிக்கொள்வது போல ஆகிவிடும். இந்த சம்பவம் தொடர்பாக (மல்யுத்த வீராங்கனைகள் புகார்) நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.