கத்திக்குத்து தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய சிறுவன்- பரபரப்பு தகவல்கள்
கிர்காவில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் கத்தி குத்து தாக்குதலில் இருந்து சிறுவன் தப்பியது தொடர்பான பரபரப்பு தகவல்கள் தெரியவந்து உள்ளது.;
மும்பை,
கிர்காவில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் கத்தி குத்து தாக்குதலில் இருந்து சிறுவன் தப்பியது தொடர்பான பரபரப்பு தகவல்கள் தெரியவந்து உள்ளது.
3 பேர் படுகொலை
மும்பை கிர்காவ் பகுதியில் உள்ள கட்டிடத்தில் வசித்து வருபவர் சேத்தன் காலா (வயது54). கடந்த சில மாதங்களுக்கு முன் சேத்தன் காலாவைவிட்டு அவரது மனைவி, பிள்ளைகள் பிரிந்து சென்றனர். மனைவி, பிள்ளைகள் சென்ற பிறகு சேத்தன் காலா மனரீதியாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் அதற்கு உரிய சிகிச்சை பெறவில்லை.
இதேபோல குடும்பத்தினர் தன்னை விட்டு சென்றதற்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் தான் காரணம் என சேத்தன் காலா நினைத்தார்.
இதனால் வெறிப்பிடித்து இருந்த அவர், நேற்று முன்தினம் பிற்பகல் தனது கட்டிடத்தின் 2-வது மாடியில் தனது வீட்டருகே நின்று கொண்டு இருந்த பக்கத்து வீட்டுகாரர்களை சரமாரியாக கத்தியால் குத்தினார். இந்த கொடூர சம்பவத்தில் ஜெயந்திரபாய் மிஸ்திரி (77), அவரது மனைவி இல்லா பாய் (70), ஜெனில் பாரம்பாத் (18) என்ற இளம்பெண் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
உயிர் தப்பிய சிறுவன்
இந்த தாக்குதலில் 8 வயது சிறுவன் உயிர் தப்பியது குறித்த தகவல்கள் தெரியவந்து உள்ளது. பக்கத்து வீட்டுகாரர்களை சேத்தன் காலா கத்தியால் தாக்கி கொண்டு இருந்த நேரத்தில் கட்டிடத்தில் வசித்து வந்த 8 வயது சிறுவனும் 2-வது மாடி வழியாக வந்தான். ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த சேத்தன் காலா சிறுவனையும் விடவில்லை. அவர் சிறுவனை பிடித்து தாக்க முயற்சி செய்தார்.
எனினும் கட்டிடத்தின் கீழ் பகுதியில் நின்றவர்கள் சிறுவனை விடும்படி கூச்சல் போட்டனர். இதனால் கடைசி நேரத்தில் மனம்மாறிய அவர் சிறுவனை விட்டு சென்றார்.
தாக்குதலை முடிவுக்கு கொண்டு வந்த முதியவர்
அதன்பிறகு அவர் 80 வயது முதியவர் பாரத் மேத்தாவை தாக்க சென்றார். ஆனால் முதியவர் சுதாரித்து கொண்டு சேத்தன் காலாவின் கையை மடக்கி பிடித்து கத்தியை பறித்தார். அதன்பிறகு சேத்தன் காலா அவரது வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். 80 வயது முதியவரால் சேத்தன் காலாவின் தாக்குதல் முடிவுக்கு வந்ததும் தெரியவந்து உள்ளது.
இந்தநிலையில் போலீசார் சேத்தன் காலாவை கைது செய்து நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை வருகிற 29-ந் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டது.