மும்பை,
மும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபரை காதலித்து வந்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். இதற்கிடையே இளம்பெண்ணின் நடத்தையில் சந்தேகம் அடைந்த வாலிபர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் மனஉளைச்சல் அடைந்த இளம்பெண் கடந்த மாதம் விஷம் குடித்து உள்ளார். இதனால் அவரை பெற்றோர் மீட்டு சயான் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இளம்பெண் சிகிச்சை பலனின்றி பலியானார். இளம்பெண்ணின் தற்கொலைக்கான காரணம் குறித்து பி.கே.சி போலீசார் விசாரித்தனர். மேலும் இளம்பெண் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில் தனது சாவுக்கு காரணம் காதலனும், அவரது சகோதரியும் தான் என எழுதி இருந்தார். இதன்பேரில் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக இளம்பெண்ணின் காதலன், அவரது சகோதரியை கைது செய்தனர்.