கல்யாணில் சகோதரியின் காதலனை கொன்று உடலை நதியில் வீசிய சகோதரர்கள்
சகோதரியை தாக்கிய காதலனை கொலை செய்து உடலை உல்லாஸ் நதியில் வீசிய சகோதரர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
தானே,
சகோதரியை தாக்கிய காதலனை கொலை செய்து உடலை உல்லாஸ் நதியில் வீசிய சகோதரர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காணாமல் போனார்
தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்தவர் ஷேபாஸ் சேக்(வயது28). இவர் மும்தாஜ் என்ற பெண்ணுடன் காதல் உறவில் இருந்து வந்துள்ளார். மும்தாஜ் ஏற்கனவே திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்றவர் ஆவார். இருவருமே திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த 4-ந்தேதி ஷேபாஸ் சேக் திடீரென காணாமல் போனார். இது பற்றி மும்தாஜ் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் ஷேபாஸ் சேக்கை தேடிவந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஷேபாஸ் சேக், மும்தாஜிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.
3 பேர் கைது
இதுபற்றி அறிந்த மும்தாஜின் சகோதரர்களான ஷோயிப் சேக், இர்ஷாத் சேக் உள்பட 3 பேர் சேர்ந்து ஷேபாஸ் சேக்கை அடித்து கொலை செய்து, உடலை உல்லாஸ் நதியில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மும்தாஜின் சகோதரர்கள் 2 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட ஹேமந்த் பிச்வாடே என்பவரும் கைது செய்யப்பட்டார். உல்லாஸ் நதியில் வீசப்பட்ட ஷேபாஸ் சேக்கின் உடலை தேடும் பணி நடந்து வருவதாக கடக்பாடா போலீசார் தெரிவித்தனர்.