சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபல தாதாக்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு

நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில் பிரபல தாதாக்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.;

Update:2023-03-21 00:15 IST

மும்பை, 

நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில் பிரபல தாதாக்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

கொலை மிரட்டல்

இந்தி நடிகர் சல்மான்கான் மும்பை பாந்திரா பகுதியில் வசித்து வருகிறார். அவரது அலுவலகத்துக்கு சம்பவத்தன்று ரோகி கார்க் என்பவரிடம் இருந்து இ-மெயில் ஒன்று வந்தது. அந்த இ-மெயிலில் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

அதில், "சமீபத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் செய்தி சேனலுக்கு கொடுத்த பேட்டியை சல்மான்கான் பார்க்க வேண்டும். கோல்டி பாய் (கோல்டி பிரார்) இந்த பிரச்சினையை முடிக்க சல்மான்கானுடன் நேருக்கு நேர் பேச விரும்புகிறார். இன்னும் நேரம் உள்ளது. நேரம் கடந்தால் நீங்கள் அதிர்ச்சிகரமான ஒரு சம்பவத்தை பார்க்க நேரிடும் " என கூறப்பட்டு இருந்தது.

வழக்குப்பதிவு

இது தொடர்பாக மும்பை பாந்திரா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது. இந்தநிலையில் மிரட்டல் இ-மெயில் தொடர்பாக மும்பை போலீசார் பஞ்சாபை சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய், அவரது நண்பரான தாதா கோல்டி பிரார் மற்றும் ரோகித் கார்க் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இவர்கள் மீது பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கும் உள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சல்மான் கானுக்கு கடிதம் மூலம் லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்