மும்பை,
மேற்கு ரெயில்வேயில் குஜராத்தை சேர்ந்த ஒருவர் சீனியர் இன்ஸ்டக்டராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் இவரை அணுகிய ஊழியர் ஒருவர் பணி இடமாற்றம் கோரி விண்ணப்பித்தார். ஆனால் அதற்கு அதிகாரி ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று ஊழியர் தெரிவித்தார். இது தொடர்பான பேரத்தில் ரூ.40 ஆயிரம் லஞ்சம் தருவதாக ஊழியர் ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் லஞ்சம் கொடுக்க மனம் இன்றி சி.பி.ஐ. லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து சி.பி.ஐ. போலீசார் கொடுத்த யோசனைப்படி, சம்பவத்தன்று ஊழியர் அதிகாரியை சந்தித்து ரூ.25 ஆயிரத்தை முதல் கட்டமாக வழங்கினார். இதை மறைந்திருந்து கண்காணித்த சி.பி.ஐ. போலீசார் லஞ்ச பணத்துடன் அதிகாரியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.