மத்திய விசாரணை அமைப்புகள் வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும்- அஜித்பவார் வலியுறுத்தல்
மந்திரி அனில் பரப் மீதான நடவடிக்கையை தொடர்ந்து, மத்திய விசாரணை அமைப்புகள் வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும் என மந்திரி அஜித் பவார் கூறியுள்ளார்.;
மும்பை,
மந்திரி அனில் பரப் மீதான நடவடிக்கையை தொடர்ந்து, மத்திய விசாரணை அமைப்புகள் வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும் என மந்திரி அஜித் பவார் கூறியுள்ளார்.
அதிரடி சோதனை
சிவசேனாவை சேர்ந்த போக்குவரத்து துறை மந்திரி அனில் பரப் மீது அமலாக்கத்துறையினர் தற்போது புதிய வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர் வசித்து வரும் அரசு பங்களா உள்பட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவார் கூறியதாவது:-
மத்திய விசாரணை அமைப்புகள் யாருடைய தலையீடும் இன்றி தங்கள் விசாரணையை வெளிப்படையாக மேற்கொண்டால் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்.
புகார்களை விசாரிக்க இந்த விசாரணை நிறுவனங்களுக்கு சட்டம் சில அதிகாரங்களை வழங்கி உள்ளது. அந்த அதிகாரங்கள் தவறாக பயன்படுத்தப்பட கூடாது என்று மட்டுமே நான் விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மராட்டிய கலாசாரம்
மேலும் அவர் கூறுகையில், "பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், சுப்ரியா சுலே எம்.பி.யை அரசியலை விட்டு விலகி, வீட்டிற்கு சென்று சமைக்குமாறு கூறியது மராட்டிய கலாசாரம் இல்லை. சந்திரகாந்த் பாட்டீலின் கருத்து அவரது சொந்த கட்சியினருக்கு கூட பிடிக்கவில்லை.
அரசியல் தலைவர்கள் பொது இடத்தில் பேசும்போது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் எதையும் பேசக்கூடாது.
வரி குறைப்பு
முன்னாள் எம்.பி. சம்பாஜி சத்ரபதி அனைத்து கட்சி தலைவர்களிடமும் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட ஆதரவு கோரியுள்ளார். ஆனால் அவரை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு போதுமான வாக்குகள் இல்லை. மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் ஒரு இடத்தை மட்டுமே எங்களால் பெற முடியும்.
பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டுவரியை குறைத்ததன் மூலம் மாநில அரசுக்கு ரூ.2 ஆயிரத்து 400 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். மேலும் வரி குறைப்பு செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருகின்றன. ஆனால் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.