ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன விஞ்ஞானிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
ஆபாச வீடியோகால் வகையில் சிக்கி பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை கூறிய விஞ்ஞானிக்கு எதிராக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர்.;
மும்பை,
ஆபாச வீடியோகால் வகையில் சிக்கி பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை கூறிய விஞ்ஞானிக்கு எதிராக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர்.
விஞ்ஞானி கைது
புனேயில் உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டி.ஆர்.டி.ஒ.) விஞ்ஞானியாக இருப்பவர் பிரதீப் குருல்கர். இவர் ராணுவ ரகசியங்களை செல்போன் மூலம் மர்ம நபரிடம் பகிர்ந்து வருவதாக டி.ஆர்.டி.ஒ. ஊழியர் ஒருவர் மராட்டிய மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் போில் கடந்த மே மாதம் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் பிரதீப் குருல்கரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பெண் என நினைத்து பாகிஸ்தான் ஏஜெண்டிடம் ராணுவ ரகசியங்களை கூறியது அம்பலமானது. குறிப்பிட்ட பெண் வாட்ஸ்அப் மூலம் ஆபாசமாக பேசி உள்ளார். விஞ்ஞானி அவரது வலையில் சிக்கி அந்த பெண்ணிடம் ராணுவம் தொடர்பான தகவல்களை கூறியது தெரியவந்தது.
குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்தநிலையில் போலீசார் நேற்று விஞ்ஞானிக்கு எதிராக 1,000 பக்க குற்றப்பத்திரிகையை புனே செசன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். விஞ்ஞானி மீது உளவு பார்த்தல், வெளிநாட்டு ஏஜெண்டுடன் தொடர்பு கொள்ளுதல், தவறான தகவல் தொடர்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விஞ்ஞானி 'சாரா தாஸ்குப்தா' என்ற பெயரில் செயல்பட்ட பாகிஸ்தான் ஏஜெண்டிடம் ராணுவ ரகசியங்களை கூறியதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.