மராட்டிய சட்டசபையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே 4-ந் தேதி பலப்பரீட்சை- அரசு வெற்றி பெறுமா?

மராட்டிய சட்டசபையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே 4-ந் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். இந்த பலப்பரீட்சையில் அவரது அரசு வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.;

Update:2022-07-01 19:18 IST

மும்பை, 

மராட்டிய சட்டசபையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே 4-ந் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். இந்த பலப்பரீட்சையில் அவரது அரசு வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

மராட்டிய மாயாஜாலம்

மராட்டியத்தில் சிவசேனாவில் திடீர் பிளவு காரணமாக, அந்த கட்சி தலைமையில் நடந்து வந்த கூட்டணி ஆட்சி கடந்த மாதம் 29-ந் தேதி வீழ்ந்தது. இதனால் சிவசேனா அதிருப்தியாளர்களுடன் கைகோர்த்து பா.ஜனதா தலைமையில் ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிவசேனா அதிருப்தியாளர்கள் தலைமையில் புதிய அரசு நேற்று பதவி ஏற்றது.

சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், பா.ஜனதா முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்தியாகவும் பதவி ஏற்றனர். பா.ஜனதா தலைமை மராட்டியத்தில் இந்த மாயாஜாலத்தை நிகழ்த்தி அரசியல் களத்தை பரபரப்பாக்கியது.

சபாநாயகர் தேர்தல்

இந்தநிலையில் மராட்டிய சட்டசபை கூட்டம் நாளை(சனிக்கிழமை) முதல் 2 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சட்டசபை கூட்டம் நாளை  மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் என்று தேதி மாற்றம் செய்து இன்று அறிவிப்பு வெளியானது.

இந்த கூட்டத் தொடரின் முதல் நாளில் சபாநாயகர் தேர்தல் நடக்கிறது. இதற்காக நாளை மதியம் 12 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன. பா.ஜனதாவை சேர்ந்த ஒருவரே சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பலப்பரீட்சை

மேலும் 4-ந் தேதி நடைபெறும் சட்டசபை கூட்டத்தில், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அவர் சட்டசபையில் பலப்பரீட்சையை சந்திக்கிறார்.

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 39 பேர் மற்றும் சுயேச்சைகளையும் சேர்த்து தங்களது வசம் சுமார் 50 பேர் இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே தரப்பு தெரிவித்து உள்ளது. இதேபோல தங்களது கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் 106 பேர் மற்றும் சுயேச்சைகள், சிறிய கட்சிகள் என 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தங்களிடம் இருப்பதாக பா.ஜனதா தெரிவித்துள்ளது.

அரசு வெற்றி பெறுமா?

மராட்டிய சட்டசபையில் எம்.எல்.ஏ. ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது அதன் பலம் 287 ஆக உள்ளது. எனவே பெரும்பான்மையை நிரூபிக்க 144 எம்.எல்.ஏ.க்கள் தேவை. ஆனால் தங்களது வசம் 170 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக சிவசேனா அதிருப்தி அணி மற்றும் பா.ஜனதா தெரிவித்து உள்ளதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு எளிதில் வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு எதிராக வாக்களிக்குமா? அல்லது வாக்கெடுப்பை புறக்கணிக்குமா? என்று தெரியவில்லை. ஒருவேளை அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தங்கள் வசப்படுத்தி, ஏக்நாத் ஷிண்டே அரசை கவிழ்க்க சிவசேனா முயற்சி செய்யலாம். எனவே சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அணி மாறுவதை தடுக்க அவர்கள் தொடர்ந்து கோவா ஓட்டலிலேயே தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் எம்.எல்.ஏ.க்கள் பலர் மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்திருப்பதால், தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபித்த பின்னரே மந்திரி சபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே முடிவு செய்துள்ளார்.

-----------

Tags:    

மேலும் செய்திகள்