அயோத்தி இயக்கத்தில் இருந்து பால் தாக்கரேயை பிரிக்க முடியாது- முதல்-மந்திரி ஷிண்டே பேச்சு

அயோத்தி இயக்கத்தில் இருந்து மறைந்த சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவை பிரிக்க முடியாது என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.;

Update:2023-04-14 00:15 IST

மும்பை, 

அயோத்தி இயக்கத்தில் இருந்து மறைந்த சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவை பிரிக்க முடியாது என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

பாபர் மசூதி இடிப்பு

பா.ஜனதாவை சேர்ந்த மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் சமீபத்தில் 1992-ம் ஆண்டு அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது ஒரு சிவசேனா தொண்டர் கூட அதில் கலந்துகொள்ளவில்லை என்று கூறினார்.

இதற்கு உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பை பதிவு செய்தார்.

இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று கூறியதாவது:-

வெள்ளி செங்கற்கள்

பாலாசாகேப் தாக்கரேவுக்கு (பால்தாக்கரே) எதிராக பேசியிருக்க கூடாது என்று பா.ஜனதா மந்திரியான சந்திரகாந்த் பாட்டீலிடம் நான் கூறினேன்.

அயோத்தி ராமர் கோவில் இயக்கத்தில் இருந்து மறைந்த பாலசாகேப் தாக்கரேவின் பங்களிப்பை ஒருபோதும் பிரிக்க முடியாது. இதற்காக மறைந்த சிவசேனா தலைவர் "பெருமையுடன் சொல்லுங்கள், நாங்கள் இந்துக்கள் என்று" என்ற கோஷத்தை வழங்கினார். மேலும் மக்களை இந்துக்களாக ஒன்றிணைந்தார்.

இருப்பினும் மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் மறைந்த சிவசேனா தலைவரை அவமரியாதை செய்ய நினைக்கவில்லை என்று என்னிடம் தெரிவித்தார்.

நாங்கள் தானேயில் இருந்து வெள்ளி செங்கற்களை அயோத்திக்கு அனுப்பி வைத்தோம். 'கர்சேவா' (பாபர் கட்டமைப்பை இடிக்கும் இயக்கம்) நடைபெற்றபோது இன்றைய தலைவர் (உத்தவ் தாக்கரே) எங்கே இருந்தார் என்று நான் கேட்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-

வெளிநாட்டில் அவமதிப்பு

எதிர்க்கட்சிகள் இந்தியாவையும், மராட்டியத்தையும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அவமதித்து வருகின்றன. முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆணவம் காரணமாக மாநிலம் வளர்ச்சியின்மையை கண்டது. மாநில நலனுக்காக மத்திய அரசிடம் உதவி கேட்பதில் என்ன பாதிப்பு இருக்கிறது?

முன்பு மகா விகாஸ் அகாடி ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

துரோகி பட்டம்

எங்கள் அரசு சிறப்பாக செயல்படுவதை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை.

2019-ம் சட்டசபை தேர்தலில் சிவசேனா- பா.ஜனதாவுக்கு தான் ஆட்சி அமைக்க அதிகாரம் கிடைத்தது. மகா விகாஸ் அகாடி ஆட்சி தொடர்ந்திருந்தால் சிவசேனா எம்.எல்.ஏ.க்களின் எதிர்காலம் இருண்டதாக ஆகி இருக்கும். துரோகி என்ற பட்டம் உத்தவ் தாக்கரேவுக்கு தான் பொருந்தும். எனக்கு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்