ராஜ்பவனை முற்றுகையிட்ட காங்கிரஸ் மந்திரிகள் கைது
மும்பையில் ராஜ் பவனை முற்றுகையிட்ட காங்கிரஸ் தலைவர்கள், மந்திரிகள் கைது செய்யப்பட்டனர்.;
மும்பை,
மும்பையில் ராஜ் பவனை முற்றுகையிட்ட காங்கிரஸ் தலைவர்கள், மந்திரிகள் கைது செய்யப்பட்டனர்.
ராஜ் பவன் முற்றுகை
நேஷனல் ஹெரால்டு பங்கு விற்பனை விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 நாட்களாக தீவிர விசாரணை நடத்தினர். இதேபோல இந்த வழக்கில் சோனியா காந்திக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதை கண்டித்தும், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் நடந்த போலீசார் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று மும்பையில் காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது.
போராடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் தென்மும்பை ஹேங்கிங் கார்டன் பகுதியில் இருந்து ராஜ்பவன் நோக்கி பேரணியாக சென்றனர். ராஜ் பவன் அருகே போலீசார் காங்கிரஸ் தலைவர்களை தடுப்பு வைத்து தடுத்தனர். காங்கிரஸ் கட்சியினர் தடுப்புகளை அகற்ற முயன்றனர். இதனால் போலீசாருக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தலைவர்கள் கைது
இந்தநிலையில் போலீசார் ராஜ்பவன் முன் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலே, மந்திரிகள் பாலா சாகிப் தோரட், அசோக் சவான், அமித் தேஷ்முக், அஸ்லாம் சேக், வர்ஷா கெய்க்வாட் உள்ளிட்ட தலைவர்களை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இதனால் ராஜ்பவன் முன் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே கைது செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி மறுத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை ராஜ்பவன் மறுத்து உள்ளது.
மந்திரி பாலாசாகிப் தோரட் அலுவலகம் கேட்டு கொண்டதன் பேரில் தான் காங்கிரஸ் தலைவர்களுடனான, கவர்னரின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக ராஜ்பவன் தெரிவித்துள்ளது.
----------------