ஊழலில் ஈடுபடும் மாநகராட்சி அதிகாரிகள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள் - ஆதித்ய தாக்கரே பேச்சு
ஊழலில் ஈடுபடும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் ஜெயிலுக்கு அனுப்புவோம் என ஆதித்ய தாக்கரே எச்சரித்து உள்ளார்.;
மும்பை,
ஊழலில் ஈடுபடும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் ஜெயிலுக்கு அனுப்புவோம் என ஆதித்ய தாக்கரே எச்சரித்து உள்ளார்.
மாநகராட்சியில் ஊழல்
மும்பை மாநகராட்சியின் ஆட்சி காலம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முடிந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக மும்பை மாநகராட்சி மாநில அரசு நியமித்த சிறப்பு நிர்வாக அதிகாரியின் கட்டுப்பாட்டில் உள்ளது. மும்பை மாநகராட்சியின் நிர்வாக அதிகாரியாக கமிஷனர் இக்பால் சகால் உள்ளார். இந்தநிலையில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மும்பை மாநகராட்சியில் காங்கீரிட் சாலை திட்டம், ஜி20-க்காக மும்பையை அழகுபடுத்து திட்டம் போன்றவற்றில் அதிகளவில் ஊழல் நடப்பதாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா குற்றம்சாட்டி வருகிறது.
உத்தவ் சிவசேனா பேரணி
இந்தநிலையில் மும்பை மாநகராட்சியில் நடந்து வரும் ஊழலை கண்டித்து நேற்று உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா பிரமாண்ட பேரணியில் ஈடுபட்டனர். பேரணிக்கு ஆதித்ய தாக்கரே தலைமை தாங்கினார். தென்மும்பையில் உள்ள மெட்ரோ சினிமா பகுதியில் தொடங்கிய பேரணியில் நூற்றுக்கணக்கான கட்சியினர் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். சுனில் பிரபு எம்.எல்.ஏ. கூறுகையில், " மாநகராட்சியில் நடைபெறும் ஊழலால் தான் இந்த பேரணி நடக்கிறது" என்றார். பேரணி சி.எஸ்.எம்.டி.யில் உள்ள மாநகராட்சி தலைமையகம் அருகில் முடிந்தது.
அதிகாரிகளை ஜெயிலுக்கு அனுப்புவோம்
இந்தநிலையில் பேரணி நிறைவு பெற்ற மாநகராட்சி தலைமையகம் முன் ஆதித்ய தாக்கரே கட்சியினர் இடையே பேசியதாவது:- கடந்த ஒரு ஆண்டாக ஏக்நாத் ஷிண்டே அரசால் மும்பை கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. அவர் ஊழலில் தான் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சியில் நடந்து வரும் முறைகேடு குறித்து லோக் ஆயுக்தா விசாரணை நடத்த கவர்னர் ரமேஷ் பயசை சந்தித்து வலியுறுத்த உள்ளேன். மும்பையில் எந்த வேலையும் நடக்கவில்லை. இதுபோன்ற அழுக்கு அரசியலை இதற்கு முன் பார்த்தது இல்லை. மற்ற கட்சிகளில் இருந்து ஆட்களை அபகரித்து வருகின்றனர். ஊழல்களில் ஈடுபடும் மாநகராட்சி அதிகாரிகளின் பெயர் பட்டியல் தயாராக உள்ளது. எங்கள் அரசு அமையும் போது, நாங்களும் போலீசாரும் சேர்ந்து உங்களை ஜெயிலுக்கு அனுப்புவோம். எனவே மும்பையை கொள்ளையடிக்காதீர். தைரியம் இருந்தால் தேர்தலில் எங்களுடன் மோதிப்பாருங்கள். மாநகராட்சியில் கமிட்டி, கவுன்சிலர்கள், மேயர் என யாருமில்லை. மாநகராட்சி நிர்வாகி (இக்பால் சகால்) அரசிடம் இருந்து அழைப்பு வந்தால் வேகமாக பதில் அளிக்கிறார். ஆனால் மக்களை பற்றி கவலைப்படாமல் உள்ளார். ஆனால் கட்டுமான அதிபர்களுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. நாசிக், நாக்பூர், புனே, தானே மாநகராட்சி செயல்பாடு குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நேற்று உத்தவ் தாக்கரே சிவசேனாவுக்கு போட்டியாக, பா.ஜனதாவும் போட்டி போராட்டம் நடத்த இருந்தது. எனினும் புல்தானா பஸ் விபத்து காரணமாக பா.ஜனதா போராட்டம் ரத்து செய்யப்பட்டது.