மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது ஷீரடி கோவிலுக்கு சென்ற தம்பதி பலி
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஷீரடி கோவிலுக்கு சென்ற தம்பதி பலியாகினர். அவர்களது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.;
மும்பை,
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஷீரடி கோவிலுக்கு சென்ற தம்பதி பலியாகினர். அவர்களது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.
மோட்டார் சைக்கிளில் பயணம்
மும்பை பாண்டுப்பை சேர்ந்தவர் மனோஜ் ஜோஷி (வயது 34). இவரது மனைவி மானசி (30). இவர்கள் தங்களது 3 வயது மகளுடன் மும்பையில் இருந்து சுமார் 250 கி.மீ. தொலைவில் உள்ள உலக புகழ்பெற்ற ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய மோட்டார் சைக்கிளில் செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று முன்தினம் மும்பை- நாசிக் சாலையில் மோட்டார் சைக்கிளிலேயே பயணம் செய்தனர். தானே மாவட்டம் பிவண்டி அருகே உள்ள ஏவாய் பகுதியில் சென்ற போது, மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி ஒன்று மோதியது.
இந்த பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது மகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாள்.
டிரைவர் கைது
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, காயமடைந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான தம்பதி உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக பிவண்டி தாலுகாக போலீசார் கன்டெய்னர் லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.