தென்மும்பையில் உள்ள 100 ஆண்டு பழமையான கட்டிடத்தை இடிக்க ஐகோர்ட்டு அனுமதி
தென்மும்பையில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தை இடிக்க மாநகராட்சிக்கு ஐகோா்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.;
மும்பை,
தென்மும்பையில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தை இடிக்க மாநகராட்சிக்கு ஐகோா்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.
100 ஆண்டுகள் பழமையான விடுதி
தென்மும்பை புலேஷ்வர் பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான 'எச்.என். பெடிட் விடோஸ் ஹோம்' என்ற 5 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் விதவை பெண்களுக்கு விடுதியாக செயல்பட்டு வந்தது. எனினும் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருந்ததால் அதில் இருந்த பெண்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வேறு விடுதிக்கு மாறிவிட்டனர். மாநகராட்சி அந்த கட்டிடத்தை இடிக்க இருந்தது. ஆனால் கட்டிடத்தின் தரை தளத்தில் கடை நடத்தி வந்தவர்கள், குடியிருந்தவர்கள் சிலர் இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அவர்கள் கட்டிடத்தை பழுது பார்த்தால் போதும் இடிக்க தேவையில்லை என கூறினர்.
இடிக்க அனுமதி
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் தகானுகா, கமல் கட்டா அமர்வு முன் நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், "கட்டிடம் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள இடத்தில் உள்ளது. கட்டிடம் அமைந்து உள்ள பகுதி வழியாக அதிகளவில் மக்கள் வந்து செல்கின்றனர். எனவே அசம்பாவிதங்கள் நடந்தால் குடியிருப்புவாசிகள் மட்டும் இன்றி சாலையில் செல்லும் மக்களும் உயிரிழக்க நேரிடும். எனவே கவனமாக செயல்பட வேண்டும்" என கூறி மும்பை மாநகராட்சி 100 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தை இடிக்க அனுமதி வழங்கினர்.
மேலும் கட்டிடத்தில் தங்கியிருப்பவர்கள் 3 வாரத்திற்குள் காலி செய்யவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. குடியிருப்புவாசிகள் காலி செய்ய மறுத்தால், அவர்களை மாநகராட்சி வெளியேற்றலாம் எனவும் ஐகோர்ட்டு கூறியுள்ளது.
----