கார் விபத்தில் பலியான சைரஸ் மிஸ்திரி உடல் தகனம்- மும்பையில் நடந்தது
சாலை விபத்தில் பலியான டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் உடல் மும்பையில் தகனம் செய்யப்பட்டது.;
மும்பை,
சாலை விபத்தில் பலியான டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் உடல் மும்பையில் தகனம் செய்யப்பட்டது.
கார் விபத்தில் பலி
டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் குஜராத்தின் உத்வாடா பகுதியில் உள்ள பார்சி கோவிலுக்கு சென்றுவிட்டு மும்பை நோக்கி நண்பர்களுடன் காரில் வந்து கொண்டு இருந்தார். இதில் மும்பை அருகே ஆற்று பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் சைரஸ் மிஸ்திரி மற்றும் அவரது நண்பர் ஜகாங்கீர் பண்டோலே பலியானார்கள்.
மேலும் காரை ஓட்டிய பெண் டாக்டர் அனகிதா, அவரது கணவர் டாரியஸ் ஆகியோர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் பலியான சைரஸ் மிஸ்திரியின் உடல் மும்பையில் உள்ள ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்து ஜே.ஜே. ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரியான டாக்டர் ஒருவர் கூறியதாவது:-
பல இடங்களில் காயம்
சைரஸ் மிஸ்திரிக்கும், அவரது நண்பர் ஜகாங்கீர் பண்டேலவுக்கும் உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டு இருந்தன. மேலும் மார்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவர்கள் விபத்து நடந்த உடனே பலியாகி இருக்கலாம். நரம்புகள் துண்டிக்கப்பட்டதால் உடல் உள்பகுதியில் ரத்த கசிவு ஏற்பட்டு இருந்தது. காரின் வேகம் காரணமாக சைரஸ் மிஸ்திரி, ஜகாங்கீரின் உடல்கள் திடீரெனவும், வேகமாகவும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. எனினும் விரிவான பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு தான் மரணத்துக்கான சரியான காரணம் தெரியவரும். சைரஸ் மிஸ்திரியின் உடல் மாதிரி பரிசோதனைக்காக கலினா தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தகனம்
பிரேத பரிசோதனை செய்த பிறகு பிணவறையில் வைக்கப்பட்டு இருந்த சைரஸ் மிஸ்திரியின் உடலை இன்று காலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். அவரது உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டி வெள்ளை நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மும்பையில் உள்ள ஒர்லி மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் காலை 11 மணியளவில் சைரஸ் மிஸ்திரியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
உடல் தகனத்திற்கு முன் பார்சி மத முறைப்படி இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தது. சைரஸ் மிஸ்திரியின் குடும்ப மதகுரு பிரார்த்தனை செய்தார்.
பிரபலங்கள் அஞ்சலி
முன்னதாக ரத்தன் டாடாவின் 93 வயது வளர்ப்பு தாய் சிமோன் டாடா வீல்சேரில் வந்து சைரஸ் மிஸ்திரிக்கு அஞ்சலி செலுத்தினார். இதேபோல இறுதி சடங்கில் முன்னாள் டி.சி.எஸ். தலைவர் ராமதுரை, டாடா குழும நிர்வாகி மதுகண்ணன், சைரஸ் மிஸ்திரியின் அண்ணன் சபூர் மிஸ்திரி, மாமனாரும் மூத்த வக்கீலான இக்பால் சாக்லா, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, முன்னாள் மத்திய மந்திரி மிலிந்த் தியோரா, சினிமா தயாரிப்பாளர் ரோனி ஸ்குருவாலா, எச்.டி.எப்.சி. சேர்மன் தீபக் பாரக், தொழில் அதிபர்கள் அனில் அம்பானி, முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா மகன் மகாநாராயன் சிந்தியா, பா.ஜனதா எம்.எல்.ஏ. கணேஷ் நாயக் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இவர்கள் தவிர நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நிறுவன ஊழியர்கள் மட்டும் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர். டாடா குழும தலைவர் சந்திரசேகரன் சைரஸ் மிஸ்திரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.
சைரஸ் மிஸ்திரி பலியான கார் 180 கி.மீ. வேகத்தில் சென்றது
சைரஸ் மிஸ்திரியின் கார் விபத்தில் சிக்குவதற்கு முன் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பால்கர் போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த வீடியோவில் இருந்து விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கிறதா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் படி விபத்துக்கு முன்னர் கார் 180 முதல் 190 கி.மீ. வேகத்தில் சென்றுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுதவிர சொகுசு காரின் பிரேக் சிஸ்டம் தொடர்பான தரவுகளை மெர்சிடஸ்-பென்ஸ் நிறுவன அதிகாரிகள் சேகரித்து இருப்பதாகவும், இது தொடர்பாக ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
----------