துணை முதல்-மந்திரி பட்னாவிஸ் கோர்ட்டில் ஆஜர்

தேர்தல் பிரமாண பத்திரத்தில் கிரிமினல் வழக்குகளை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று கோர்ட்டில் ஆஜரானார்.;

Update:2023-04-16 00:15 IST

நாக்பூர்,

தேர்தல் பிரமாண பத்திரத்தில் கிரிமினல் வழக்குகளை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று கோர்ட்டில் ஆஜரானார்.

கிரிமினல் வழக்குகள் மறைப்பு

மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மீது சதீக் உகே என்ற வக்கீல் நாக்பூர் சிவில் கோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், "பா.ஜனதா தலைவரான தேவேந்திர பட்னாவிஸ் மீது 1996-ம் ஆண்டு மற்றும் 1998-ம் ஆண்டுகளில் மோசடி மற்றும் ஏமாற்றுதல் ஆகிய கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டு உள்ளது. ஆனால் 2014-ம் ஆண்டு தேர்தலின்போது அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கிரிமினல் வழக்குகளின் விவரங்களை குறிப்பிடாமல் மறைத்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

பட்னாவிஸ் ஆஜர்

இந்த வழக்கு நேற்று நீதிபதி வி.ஏ. தேஷ்முக் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது தற்போதைய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேரில் ஆஜரானார். இந்த வழக்கில் தேவேந்திர பட்னாவிடம் நீதிபதி வாக்குமூலம் பதிவு செய்வார். இதன்பிறகு வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நடைபெற உள்ளது.

தேவேந்திர பட்னாவிஸ் மீது வழக்கு தொடர்ந்த வக்கீல் சத்தீஷ் உகே தற்போது பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்