அமித்ஷாவுடன் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை- தேவேந்திர பட்னாவிஸ் தகவல்

Update:2023-06-06 00:45 IST

மும்பை, 

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் மந்திரி சபை விரிவாக்கம் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

மராட்டியத்தில் மந்திரிசபை விரிவாக்கம் விரைவில் செய்யப்படும். ஆனால் எப்போது நடக்கும் என்பதை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே முடிவு செய்வார்.

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவும் நானும் நேற்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினோம். இந்த கூட்டத்தில் சிவசேனாவும், பா,ஜனதாவும் அனைத்து தேர்தல்களிலும் ஒன்றாக போட்டியிடுவது குறித்தும், கட்சிகளின் கூட்டு வியூகம் குறித்து திட்டமிடுவது குறித்தும் ஆலோசனை நடத்தினோம். தாலுகாக்கள் மற்றும் மாவட்டங்களில் இரு கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். மேலும் காங்கிரஸ் தலைவர் நானா படோலே மற்றும் உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி எம்.பி.யான சஞ்சய் ராவத் ஆகியோர் தங்களின் டெல்லி பயணம் குறித்து விமர்சித்து வருவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த பட்னாவிஸ், "நானா படோலே காங்கிரஸ் கட்சியின் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு கூட உயர்மட்டத்தின் அனுமதி பெற வேண்டும். பா.ஜனதா ஒரு தேசிய கட்சி. நாங்கள் டெல்லி சென்றதில் என்ன தவறு இருக்கிறது?" என்றார். 

மேலும் செய்திகள்