'தேவேந்திர பட்னாவிஸ் களங்கம் அடைந்தவர் தான்' - உத்தவ் சிவசேனா மீண்டும் குற்றச்சாட்டு
துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் களங்கம் அடைந்தவர் தான் என உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா மீண்டும் கூறியுள்ளது.;
மும்பை,
துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் களங்கம் அடைந்தவர் தான் என உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா மீண்டும் கூறியுள்ளது.
பொதுக்கூட்டம்
உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் சொந்த மாவட்டமான நாக்பூரில் பொதுக்கூட்டம் நடத்தினார். அப்போது துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் 'நாக்பூரின் களங்கம்' என்று விமர்சித்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் ஒருபோதும் கைகோர்க்க மாட்டோம் என தேவேந்திர பட்னாவிஸ் பேசிய ஆடியோவை சத்தமாக ஒலிபரப்பி காட்டிய உத்தவ் தாக்கரே, "பா.ஜனதா தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் ஒன்றை 'ஆம்' என்று கூறினால் அதற்கு இல்லை என்று அர்த்தம். பட்னாவிஸ் ஒரு கறைப்படிந்தவர், ஏனெனில் அவர் ஒரு போதும் தேசியவாத காங்கிரசுடன் சேரமாட்டேன் என கூறிவிட்டு அவர்களுடனே தற்போது கூட்டணியில் இணைந்துள்ளார்" என்று கூறினார்.
பட்னாவிஸ் பதிலடி
உத்தவ் தாக்கரேயின் பேச்சுக்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "மாநிலத்தில் நடந்து வரும் அரசியல் சூழ்நிலை காரணமாக முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு சில மனநல சிகிச்சை தேவைப்படுகிறது" என்றார். அதேபோல முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, "சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் கொள்கைகளை கைவிட்டுவிட்டு, அவரது பெயரை களங்கம் செய்தவர், தற்போது தேவேந்திர பட்னாவிசை களங்கத்துக்குரியவர் என்று கூறுகிறார்" என்றார். இந்தநிலையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-
அமலாக்கத்துறை விசாரணை
மராட்டியத்தின் கலாசாரம் மற்றும் மரபுகளை பற்றி அறியாதவர்கள் தற்போது ஆட்சியில் உள்ளனர். நமது கலாசாரத்திற்கு களங்கத்தை ஏற்படுத்துபவர்களை துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மோசமாக நியாயப்படுத்தி வருகிறார். இதனால் அவரும் கறை படிந்தவராக மாறி உள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் அஜித்பவார், சகன் புஜ்பால், பிரபுல் படேல் ஆகியோர் கறை படிந்தவர்களா, இல்லையா என்பதை தேவேந்திர பட்னாவிஸ் விளக்க வேண்டும். முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மீதான அமலாக்கத்துறை வழக்குகள் நிலை குறித்து கூற வேண்டும். பிரதமர் வாஜ்பாய் காலத்தில் இருந்த பா.ஜனதா கட்சி தற்போது இல்லை. அந்த கட்சியின் சித்தாந்த வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ். கூட உண்மையான இலக்கில் இருந்து வழிமாறி சென்றுவிட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.