மும்பை,
மும்பை கார் பகுதியில் உள்ள 17-வது சாலையில் இந்தி நடிகர் சல்மான் கானின் தங்கை அர்பிதாவின் வீடு உள்ளது. இவரின் வீட்டில் இருந்து கடந்த திங்கட்கிழமை சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைரம் பதித்த தங்க நகை திடீரென காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த அர்பிதா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில் அவரது வீட்டில் வேலை செய்து வரும் சந்தீப் ஹெக்டே (வயது 30) என்பவர் தான் இந்த வைர நகையை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கினர். அப்போது செல்போன் சிக்னல் போன்ற தொழில்நுட்பங்களின் உதவியுடன் அவர் தானேயில் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டறிந்து கைது செய்தனர். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.