சரத்பவார், அஜித்பவார் சந்திப்பில் என்ன நடந்தது என்று தெரியாது - ஜெயந்த் பாட்டீல் பேட்டி
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அஜித்பவார் சந்திப்பில் என்ன நடந்தது என்பது குறித்து தனக்கு தெரியாது என்று ஜெயந்த் பாட்டீல் கூறியுள்ளார்.;
மும்பை,
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அஜித்பவார் சந்திப்பில் என்ன நடந்தது என்பது குறித்து தனக்கு தெரியாது என்று ஜெயந்த் பாட்டீல் கூறியுள்ளார்.
ரகசிய சந்திப்பு
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சரத்பவாரின் அண்ணன் மகனுமான அஜித்பவார் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் சமீபத்தில் பா.ஜனதா தலைமையிலான மகாயுதி கூட்டணியில் இணைந்தனர். அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், 8 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர். ஆனால் கட்சியின் தேசிய தலைவரான சரத்பவார் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்து உள்ளது. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும், துணை முதல்-மந்திரியுமான அஜித்பவாரும் புனேயில் ஒரு தொழிலதிபர் வீட்டில் நேற்று முன்தினம் ரகசியமாக சந்தித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த சந்திப்பின்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீலும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த ரகசிய சந்திப்பு மராட்டிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து ஜெயந்த் பாட்டீல் கூறியதாவது:-
அமலாக்கத்துறை நோட்டீஸ்
இது ரகசிய சந்திப்பு ஒன்றும் இல்லை. நானும் சரத்பவாரும் ஒரு பொதுவான அறிமுகமானவரின் வீட்டிற்கு சென்றோம். அங்கிருந்து நான் சீக்கிரம் கிளம்பினேன். பின்னர் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. எனது சகோதரருக்கு அமலாக்கத்துறையிடம் இருந்து சில நிறுவனங்களை பற்றி தகவல்களை கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 4 நாட்களுக்கு முன்பு எனது சகோதரர் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்று தனக்கு தெரிந்த அனைத்து விவரங்களையும் சமர்ப்பித்தார். இந்த சந்திப்புக்கும், அமலாக்கத்துறை நோட்டீசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
கட்சியில் பிளவு
நான் அஜித்பவார் அணியில் சேர இருப்பதாக யூகங்கள் எழுந்துள்ளன. ஆனால் அதில் உண்மை இல்லை. நான் எனது நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேன். நான் சரத்பவாருடன் தான் இருக்கிறேன். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் எந்த பிளவும் ஏற்படவில்லை. சரத்பவார் தாங்கள் தலைவர் என இரு அணியினரும் கூறுகின்றனர். எல்லோரும் அவரது புகைப்படத்தை தான் வைத்திருக்கிறார்கள். எதிரணியினரும் அவருக்காக தான் வேலை செய்வதாக கூறுகின்றனர். எனவே கட்சியில் பிளவு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.