தொடர்மழை காரணமாக தான்சா, விகார் ஏரி நிரம்பியது

தொடர்மழை காரணமாக மும்பைக்கு குடிநீர் வழங்கும் தான்சா, விகார் ஏரி முற்றிலும் நிரம்பியது.;

Update:2023-07-27 00:15 IST

மும்பை, 

தொடர்மழை காரணமாக மும்பைக்கு குடிநீர் வழங்கும் தான்சா, விகார் ஏரி முற்றிலும் நிரம்பியது.

பலத்த மழை

மும்பையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்றும் பலத்த மழை காரணமாக தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியது. முக்கியமாக பரேல் இந்துமாதா, அந்தேரி சப்வே, மிலன் ரோடு, எல்.பி.எஸ். மார்க் போன்ற இடங்களில் வெள்ளம் தேங்கியது. அந்தேரி சப்வேயில் தேங்கிய வெள்ளம் காரணமாக சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மும்பை நகரில் நேற்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை 6.2 செ.மீ. மழையளவு பதிவானது. கிழக்கு புறநகரில் 3.50 செ.மீ., மேற்கு புறநகரில் 4.6 செ.மீ. மழையும் பதிவானது.

2 ஏரிகள் நிரம்பின

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையை தொடர்ந்து மும்பைக்கு குடிநீர் வழங்கும் 7 ஏரிகளின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இது வரையில் நீர் இருப்பு 50 சதவீதம் எட்டி இருந்தது. தொடர் மழை காரணமாக மும்பை போரிவிலியில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் உள்ள விகார் ஏரி நேற்று முன்தினம் நள்ளிரவில் நிரம்பியது. இதன் உபரிநீர் திறந்து விடப்பட்டது. தானே மாவட்டத்தில் உள்ள தான்சா ஏரியும் நேற்று அதிகாலை 4.35 மணி அளவில் நிரம்பியது. மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஏற்கனவே துல்சி ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி இருந்தது. மேலும் 2 ஏரிகள் நிரம்பி உள்ளதால் மும்பை மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இருப்பினும் கடந்த 2 ஆண்டுகளை விட தண்ணீர் இருப்பு குறைவாக இருப்பதால், 10 சதவீதம் குடிநீர் வினியோகம் குறைப்பு இந்த மாத இறுதி வரையில் நீடிக்கும் என மாநகராட்சி தெரிவித்து உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்