சிவசேனாவை உடைப்பதில் தோல்வி அடைந்து இருந்தால் ஏக்நாத் ஷிண்டே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து இருப்பார் - மந்திரி தீபக் கேசர்கர் பரபரப்பு பேட்டி

உத்தவ் தாக்கரேக்கு எதிராக கட்சியை உடைப்பதில் தோல்வி ஏற்பட்டு இருந்தால் ஏக்நாத் ஷிண்டே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து இருப்பார் என மந்திரி தீபக் கேசர்கர் கூறியுள்ளார்.;

Update:2023-06-23 00:30 IST

மும்பை, 

உத்தவ் தாக்கரேக்கு எதிராக கட்சியை உடைப்பதில் தோல்வி ஏற்பட்டு இருந்தால் ஏக்நாத் ஷிண்டே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து இருப்பார் என மந்திரி தீபக் கேசர்கர் கூறியுள்ளார்.

கட்சியை உடைத்த ஷிண்டே

சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் கூட்டணி ஆட்சியில் நகர்புற மேம்பாட்டு துறை மந்திரியாக இருந்தவர் ஏக்நாத் ஷிண்டே. இவர் கடந்த ஆண்டு கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேக்கு எதிராக செயல்பட்டு கட்சியை உடைத்தார். மேலும் 40 சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜனதா ஆதரவுடன் முதல்-மந்திரி ஆனார். ஏக்நாத் ஷிண்டே கட்சியை உடைத்து ஒரு ஆண்டு ஆன நிலையில் தற்போது சிவசேனா கட்சி பெயர், சின்னம் அவர் வசமாகி உள்ளது. அவருக்கு ஆதரவாக 40-க்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்கள், 12 எம்.பி.க்கள் உள்ளனர்.

தற்கொலை செய்து இருப்பார்

இந்தநிலையில் உத்தவ் தாக்கரேக்கு எதிராக கட்சியை உடைத்து புதிய ஆட்சி அமைப்பதில் தோல்வி ஏற்பட்டு இருந்தால் ஏக்நாத் ஷிண்டே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து இருப்பார் என மாநில பள்ளி கல்வித்துறை மந்திரி தீபக் கேசர்கர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.

இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த ஆண்டு நடந்த சிவசேனா நிறுவன நாள் விழாவில் ஏக்நாத் ஷிண்டே அவமானப்படுத்தப்பட்டார். ஏக்நாத் ஷிண்டே மிகச்சிறந்த மனிதர். உண்மையான சிவசேனா தொண்டன். அவர் என்னிடம், 'உத்தவ் தாக்கரேக்கு எதிராக கட்சியை உடைப்பதில் தோல்வி அடைந்தால் என்னுடன் வந்த எம்.எல்.ஏ.க்களை திருப்பி அனுப்பி விடுவேன். மேலும் மாதோஸ்ரீக்கு போன் செய்து நான் தான் தவறு செய்தேன். எம்.எல்.ஏ.க்கள் எந்த தவறும் செய்யவில்லை என கூறிவிட்டு துப்பாக்கியால் தலையில் சுட்டு கொள்வேன்' என கூறியிருந்தார். தன்னால் ஒரு எம்.எல்.ஏ. கூட பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என ஏக்நாத் ஷிண்டே நினைத்தார். அதற்காக அவர் உயிரை கூட கொடுக்க தயாராக இருந்தார். இவ்வாறு அவர் கூறினார்.

சஞ்சய் ராவத் கருத்து

தீபக் கேசர்கர் பேசியது குறித்து சஞ்சய் ராவத் எம்.பி. கூறுகையில், "ஒருவர் தற்கொலை செய்வது பற்றி முடிவு செய்து இருப்பது தீபக் கேசர்கருக்கு தெரிந்து இருப்பதால் போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். நாளை எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் தீர்ப்பு வந்த பிறகு அவர் தற்கொலை செய்து கொண்டால் போலீசார் உடனடியாக தீபக் கேசர்கரிடம் தான் விசாரிக்க வேண்டும்" என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்